கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களது அழைப்பின் பேரில் மட்டக்களப்புக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த தென் ஆபிரிக்க நாட்டிக்கான உயர்ஸ்தானிகர்( Sandile Edwin Schalk ) சாண்டிலே எட்வின் ஷால்க் அவர்கள் மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையை பார்வையிட்டதுடன் கல்லூரியின் அதிபர் ஏ.வீ.ஜோசப் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர்ஏ.பீ.மதனவாசன் மற்றும் உயர்ஸ்தானிகரின் செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் வி.பிரதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் தென் ஆபிரிக்க நாட்டிற்கான உயர்ஸ்தானிகர் ( Sandile Edwin Schalk ) சாண்டிலே எட்வின் ஷால்க் அவர்களை கௌரவிக்கும் முகமாக நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலையில் 150 வருட வரலாற்றை எடுத்துக் கூறும் நூற்றாண்டு விழா நூலொன்றும் இதன்போது உயர்ஸ்தானிகருக்கு வாங்கிவைக்கப்பட்டது.
இலங்கை மக்களுடன் தென் ஆபிரிக்க நாடு நல்லிணக்கத்துடன் செயற்படுவதாக இதன் போது உயர்ஸ்தானிகர் குறித்த நிகழ்வில் உரையாற்றும் போது கருத்து தெரிவித்ததுடன், மேலும் புனித மிக்கேல் பாடசாலைக்கு ரக்பி விளையாட்டை ஊக்கு விப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற் கொள்வதாகவும் இதன் போது கருத்து தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தென் ஆபிரிக்க நாட்டிற்கான உயர்ஸ்தானிகர் ( Sandile Edwin Schalk) சாண்டிலே எட்வின் ஷால்க் அவர்கள் 400 வருடங்கள் பழமைவாய்ந்த மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையினை பார்வையிட்டிருந்தார்.
இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் ஏ.பீ.மதனவாசன் மற்றும் உயர்ஸ்தானிகரின் செயலாளர், உள்ளிட்டோர் வருகை தந்திருந்ததுடன், உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை வளாகத்தை சுற்றிக்காட்டியிருந்ததுடன், மாவட்டத்தின் வளங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇