கொழும்பு நகர்ப்புற மறுமலர்ச்சி கூட்டுத் திட்டத்தின் (Colombo Urban Revitalization Partnership Programme) கீழ், குறைந்த வருமானம் கொண்ட மற்றும் நிரந்தர வீடற்ற குடும்பங்களுக்கு 2,000 க்கும் மேற்பட்ட வீடுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ‘ஸ்டேடியம்கம’ வீடமைப்புத் தொகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, இதனைத் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டிற்குள் 2,500 நகர்ப்புற வீடமைப்பு அலகுகள் தகுதியான குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொழும்பில் மொத்தம் 7,000 புதிய வீடுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வீடுகளை வெறும் கட்டிடங்களாக வழங்காமல், பாதுகாப்பு, சமூகத் தேவைகள், வசதிகள் மற்றும் சௌகரியங்கள் நிறைந்த முழுமையான குடியிருப்புகளாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டுக்குள் மூன்று முக்கிய வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப, ஏற்கனவே உள்ள சட்டதிட்டங்களில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தனித்தனி வீடுகளில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாறும் குடும்பங்கள், பொதுவான விதிகளைப் பின்பற்றி வாழப் பழகிக்கொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், முறையான வசதிகள் வழங்கப்படும் போது மக்கள் அதிக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
குடியிருப்பாளர்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலமே தரமான சேவைகளை வழங்க முடியும் என அவர் இதன்போது வலியுறுத்தினார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










