பல புதிய புகையிரத சேவைகளை அறிமுகப்படுத்த புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இத் தீர்மானம் சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காகவும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதனடிப்படையில் குறிப்பாக மலையக மார்க்கம் , புகையிரத சுற்றுலாப் பயணிகளிடையே, பிரபலமாகவும், ஈர்ப்பு அதிகமாகவும் இருப்பதுடன் புகையிரத சேவைக்கான அதிக கேள்வி இருப்பதாலும் இந் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனவரி 31ஆம் திகதி முதல் கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு நேர அஞ்சல் புகையிரத சேவையும் தினசரி சேவையில் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
புதிய தீர்மானத்தின்படி, எல்ல- ஒடிஸி – கொழும்பு புகையிரத சேவையில் மேலதிக பயணத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான எல்லா- ஒடிஸி – கொழும்பு புகையிரத சேவையில் மேலதிக புகையிரத பயணத்தை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொழும்பிலிருந்தும் , பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதுளையிலிருந்தும் புறப்படும்.
இதேவேளை பெப்ரவரி மாதம் முதல் எல்ல – ஒடிஸி – கண்டி மற்றும் எல்ல- ஒடிஸி – நானு ஓயா ஆகிய இரண்டு புதிய புகையிரத சேவைகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் , எல்ல – ஒடிஸி – கண்டி புகையிரத சேவை , பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிக்கும் தெமோதரவுக்கும் இடையில் இயக்கப்படும் என்று புகையிரத பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எல்ல ஒடிஸி – நானுஓயா புகையிரத சேவை, பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையில் இயக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…