கண்டி – கம்பளை ஊடாக நுவரெலியா செல்லும் வீதியை போக்குவரத்துக்காகத் திறந்துவிடுவது தொடர்பான தீர்மானம், எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்குள் அறிவிக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த வீதி போக்குவரத்துக்காக அத்தியாவசிய சீரமைப்புகளை மேற்கொண்டு வழமைக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், வாகனப் போக்குவரத்துக்கு இது உகந்ததா என்பது தொடர்பான தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் உரிய பரிந்துரைகள் கிடைக்கும் வரை வீதி திறக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்த நிலை காரணமாக இந்த வீதிக்கு பாரிய சேதம் ஏற்பட்டிருந்த நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் வீதியின் இரு பக்கங்களிலிருந்தும் வந்து குவிந்திருந்த மண் மற்றும் சிதைவுகளை அகற்றிச் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
எதிர்காலத்தில் குறித்த வீதி போக்குவரத்துக்காகத் திறந்துவிடப்பட்டாலும், முழுமையாகச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், அதற்கு மேலும் சில காலம் எடுக்கும் என்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி மேலும் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










