மத்திய கிழக்கு நெருக்கடி நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரியை உறுதி செய்ய அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களை ஆராய்வதற்கும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தேவைகளை கவனிப்பதற்கும் அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் 01.03.2026 அன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளுக்கான விசா சலுகைகள் மற்றும் வசதிகள் தற்போது நாட்டிற்குள் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அவர்களது விசா காலத்தை எவ்வித கட்டணமுமின்றி இரண்டு வாரங்களுக்கு (14 நாட்கள்) நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேவைப்படின் இதனை மேலும் நீடிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். நாட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களை ஆராயவும் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அந்தந்த தூதரகங்களுடன் கலந்துரையாடி முறையான வேலைத்திட்டமொன்றை உடனடியாகத் தயாரிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும், சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள தடைகளை கருத்திற்கொண்டு, வெளிவிவகார அமைச்சு மற்றும் விமான நிறுவனங்கள் இணைந்து மாற்று வான்வழிகள் ஊடாக சுற்றுலாப் பயணிகள் தமது நாடுகளுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல், இலங்கைக்கு வர எதிர்பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் எவ்வித இடையூறுமின்றி வருகை தருவதற்கு மாற்று இடங்கள் (Destinations) குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவும், அதற்கான வசதிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

செயற்படும் கட்டுப்பாட்டு கருமபீடம்

சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க பல அரச நிறுவனங்களின் ஊடாக 24 மணிநேரச் சேவைகள் நிறுவப்பட்டுள்ளன:

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை: நாட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன், 1912 என்ற உடனடி அழைப்பிலக்கத்தின் ஊடாக எந்தவொரு பிரச்சினையையும் அறிவிக்க முடியும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்: வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்க 1989 என்ற அவசர அழைப்பிலக்கத்தின் ஊடாக விசேட கட்டுப்பாட்டு அறை செயற்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றுடன் மேலதிகமாக, வெளிவிவகார அமைச்சு தலையிட்டு மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை உருவாக்கியுள்ளது. அவசர காலங்களில் விரைவாகச் செயற்படவும், இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அனைத்துத் தூதரகங்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் தயார் நிலையில் உள்ளன.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் உள்ளக போக்குவரத்து நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுக்கவும், நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் உடனடித் தீர்மானங்களை எடுக்கவும் அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக இந்தக் கலந்துரையாடலில் மேலும் வலியுறுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிவிவகார ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சாமிந்த பத்திராஜ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க மற்றும் சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், சுற்றுலாத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை உள்நாட்டு சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் (SLAITO) தலைவர் நளின் ஜயசுந்தர, செயலாளர் நிலான் விக்ரமசிங்க, இலங்கை சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் (THASL) உறுப்பினர்களான சந்திரா விக்ரமசிங்க, நிஹால் முஹந்திரம் உள்ளிட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects