பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வெறுமனே சட்டப் புத்தகங்களுக்குள்ளோ அல்லது ஆவணங்களுக்குள்ளோ மாத்திரம் மட்டுப்படுத்தாது, அவற்றை இந்நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தமது நிஜ வாழ்க்கையில் அனுபவிக்கக்கூடிய யதார்த்தமாக மாற்றுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” எனும் தொனிப்பொருளின் கீழான இம்முறை சர்வதேச மகளிர் தினத் தேசிய நிகழ்வு , 08.03.2026 அன்று மாத்தறை, ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் ஞாபகார்த்த மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
இன்று நாம் அனுபவிக்கும் கல்வி, அரசியல் உரிமைகள் உள்ளிட்ட சகல விதமான சுதந்திரங்களும் வரலாறு முழுவதிலும் பெண்கள் முன்னெடுத்த பாரிய போராட்டங்களினால் கிடைத்தவையாகும். இந்நாளை வெறும் பூங்கொத்துக்களுக்கு மாத்திரம் வரையறுக்க முடியாது. அந்த உரிமைகளைப் பாதுகாத்து, எமது நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்க்கையைத் தற்போதைய நிலையை விடச் சிறந்த இடத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதே எமது உன்னத நோக்கமாகும் என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, பிரதி அமைச்சரான வைத்தியர் நாமல் சுதர்சன, தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் சுசிறிபால மானவடு, இலங்கைக்கான தூதுவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
(பிரதமர் ஊடகப் பிரிவு)






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










