நாளை (19.03.2026) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இரட்டை எண்கள் (0, 2, 4, 6, 8): வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண்ணாகவோ அல்லது ‘0’ ஆகவோ இருந்தால், இரட்டைப்படை திகதிகளில் (உதாரணமாக: மார்ச் 20, 22…) எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒற்றை எண்கள் (1, 3, 5, 7, 9): இறுதி இலக்கம் ஒற்றை எண்ணாக இருந்தால், ஒற்றைப்படை திகதிகளில் (உதாரணமாக: மார்ச் 19, 21…) எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாளாந்தம் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டு வருவதாலும், உள்நாட்டில் எரிபொருளுக்கான கேள்வி அசாதாரணமான முறையில் அதிகரித்து வருவதாலும், நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, கடந்த 16 ஆம் திகதி முதல் மீண்டும் QR குறியீட்டு முறையைச் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இலக்கத் தகடு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










