கொழும்பு கோட்டைக்கும் காலிக்கும் இடையிலான கடற்கரை புகையிரத பாதையில் முக்கிய தரிப்பிடமான பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தை நவீன தரத்திற்கு உயர்த்துவதற்கான முதற்கட்டப் பணிகள் 19.03.2026 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) செயலகத்தின் வழிகாட்டலில், தாவுதி போரா (Dawoodi Bohras) சமூகத்தின் நிதிப் பங்களிப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கான நிர்மாணப் பணிகளை Amic Engineering Private Limited நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.
சுமார் ரூ. 600 இலட்சம் செலவில் அடுத்த 5 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
புகையிரத நிலைய நடைமேடைகள் (Platforms) தரமுயர்த்தப்படுவதுடன், நவீன இருக்கை வசதிகளும் அமைக்கப்படும்.
மழைநீரால் பாதிக்கப்படாத வகையில் நிலையத்தின் கூரை முழுமையாகப் புனரமைக்கப்படும். அத்துடன், துருப்பிடிக்காத வலுவான உலோகப் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.
நவீன மின்விளக்கு வசதிகள் மற்றும் CCTV கேமரா கட்டமைப்பு என்பன பயணிகளின் பாதுகாப்பிற்காக நிறுவப்படும்.
மாற்றுத்திறனாளிகள் இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் விசேட அணுகுமுறைப் பாதைகள் (Easy access routes) உருவாக்கப்படும்.
புகையிரதங்களின் நேர அட்டவணையைத் துல்லியமாக அறிந்துகொள்ள நவீன காட்சிப் பலகைகள் நிறுவப்படும்.
இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் மேற்பார்வையில் நாடு முழுவதும் உள்ள 100 புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது முன்னெடுக்கப்படுகிறது.
ஏற்கனவே காலி – தல்பே ரயில் நிலையம் இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.
நாரஹேன்பிட்டி, தெஹிவளை, பொலன்னறுவை, கண்டி மற்றும் மருதானை உள்ளிட்ட முக்கிய நிலையங்களும் விரைவில் இவ்வாறான தனியார் பங்களிப்புடன் நவீனமயமாக்கப்படவுள்ளன.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










