நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை நிர்வகிப்பதற்கும் கண்காணிப்பதற்குமாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், நீர்மூலங்கள் வேகமாக வற்றி வருகின்றமை மற்றும் உற்பத்தித் திறன் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு, சபையின் தலைவர் மற்றும் பொது முகாமையாளரின் ஆலோசனையின் பேரில் இந்த விசேட செயற்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான நீர் விநியோகத்தை உறுதிப்படுத்துதல், நீர் உற்பத்தி மற்றும் விநியோக முறைகளைக் கண்காணித்தல் மற்றும் அன்றாட நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கையிடல் ஆகியன இக்குழுவின் பிரதான பணிகளாகும்.
எதிர்காலத்தில் அன்றாட நீர் விநியோகத் தடைகள் நீண்ட நேரம் நீடிப்பதைத் தவிர்க்கவும், நுகர்வோர் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கான நீரைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தவும் இக்குழு நடவடிக்கை எடுக்கும்.
நீர் நிலைகளின் நீர்மட்டம் வழமைக்குத் திரும்பும் வரை இக்குழு தொடர்ச்சியாகச் செயற்படும் என சபை மேலும் தெரிவித்துள்ளது.
குறைந்தளவிலான நீர் உற்பத்தித் திறனால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதற்கும், சேவைகளை உகந்த மட்டத்தில் பேணுவதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
எனவே, குடிநீரை அத்தியாவசியத் தேவைகளுக்காக மாத்திரம் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










