நீளிரா
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஸ்பிரிட் மீடியாவின் சார்பில் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ராணா டகுபதி ஆகியோரின் தயாரிப்பிலும், ஈழத்து இயக்குநர் சோமிதரனின் எழுத்து- இயக்கத்திலும், நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா குகராஜா, சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலரின் நடிப்பிலும், செல்வரத்னம் பிரதீபனின் ஒளிப்பதிவிலும். கே இன் இசையிலும், ராதா ஸ்ரீதரின் படத்தொகுப்பிலும் 03-04-2026 அன்று முதல் ஈழத்தின் கதையைத் தாங்கி உலகெங்கும் திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம் நீளிரா.
அறிமுகம்
1988 காலப்பகுதியில் இந்திய இராணுவத்திற்கும் தமிழ் போராளிகளுக்கும் இடையில் ஆயுத மோதல் நடந்த சூழ்நிலையில் வடபகுதியில் ஒரு வீட்டில் வாசுகி எனும் இளம் பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. விடிந்தால் திருமணம் எனும் நிலையில் உறவினர்கள், சிறுவர்கள் என வீடு குதூகலித்திருக்கும் போது இந்திய இராணுவக் குழுவொன்று அவ்வீட்டு வளாகத்தினுள் வந்து நிலையெடுக்கின்றனர். வீட்டுவளாகத்தினுள் இராணுவத்தினரின் வருகையே அக்குடும்பத்தை கதிகலங்கச் செய்துவிட்ட நிலையில் பின்னர் ஓர் நிர்ப்பந்தம் காரணமாக அத்தனை இராணுவத்தினரும் அவ்வீட்டினுள் நுழைந்து பதுங்குகின்றனர். தமது பிரதேசத்தில் ஒரு இராணுவக் குழு பதுங்கியுள்ளது எனும் தகவல் அறிந்து அதனைத் தேடும் ஆயுதம் ஏந்திய போராளிகள் அவ்வீட்டைச் சுற்றிவளைக்கின்றனர். அதன் பின்னர் சாதாரணமான அந்த இரவு ஒரு நீண்ட இரவாகின்றது. இந்திய இராணுவத்தினர் – மணப்பெண் உள்ளிட்ட குடும்பம் – ஆயுதங்களுடன் போராளிகள் எனும் முக்கோண வியூகத்தில் இறுதியில் என்ன நடந்தது என்பதே நீளிரா.
படம் ஆரம்பித்து முதல் 10 – 15 நிமிடங்களுக்குள்ளேயே பார்வையாளர்களையும் ஒரு கதாபாத்திரமாக படத்தினுள் இழுத்துவிடும் மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர். அதன்பின்னர் அது ஒரு திரைக்காட்சியாக அல்லாமல் எம்மைச்சுற்றி நகரும் நிகழ்வுகளாகவே எமக்குத் தெரிகின்றன. 1948 முதல் சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒரு நாட்டின் வேறு ஒரு மூலையில் ஒரு திருமணம் நடத்துவதற்குக் கூட இரண்டு நாட்டு இராணுவங்களின் அனுமதியைப் பெற வேண்டும் எனும் ஆரம்பக் காட்சியே இத்திரைப்படத்தின் கதைக்களத்தை விபரிக்கப் போதுமானது. பின்னர் 1988 காலப்பகுதியின் வாழ்வியலையும். அழகியலையும் சில அரசியலையும் கூட பேசியபடி காட்சிகள் நகர்கின்றன.
வீட்டு வளாகத்தினுள் இராணுவத்தினரின் வருகையுடன் காட்சிகள் சூடு பிடிக்க ஆரம்பிக்கின்றன. இந்திய அமைதிப்படையினரின் சில குணாம்சங்களை வெளிப்படையாகக் காண்பிக்க முடியாத இக்கட்டான சூழலில் இயக்குநர் தள்ளப்பட்டிருந்தாலும் அதனைப் பல குறியீடுகளாகப் பதிவு செயதுள்ளார். சப்பாத்தியுடன் அந்த வீட்டிலிருந்து ஒரு கோழியைப் பிடித்து நெருப்பில் சுட்டுச் சாப்பிடுவது போன்ற காட்சி ஒரு உதாரணம். அங்கே நெருப்பில் வேகியது நிச்சயமாக கோழிக்கால் மட்டுமல்ல. இராணுவத்தினரின் வருகையின் பின்னர் பெண்கள் மேலதிக ஆடைகள் உடுத்துவது போன்ற பல காட்சிகளினாலும், “நீங்கள் வீட்டிற்குள் வராமல் விட்டிருந்தால் கலியாணம் அமைதியாக நடந்திருக்கும்”, “எந்த யுத்தத்திலும் இறுதி வெற்றி கிடையாது” போன்ற பல வசனங்களிலும் படம் அரசியல் பேசுகிறது.
நாய் குரைப்புகள், பொம்மைத் துப்பாக்கிகள், முகமூடி போட்ட தலையாட்டி, கேசட்டும் டெக்கும் வாடகைக்கு எடுத்து விடிய விடிய சினிமா பார்ப்பது எனப் பல காட்சிகள் எண்பதுகளில் வாழ்ந்தவர்களை நிச்சயம் ஒரு காலப்பயணம் கொண்டு செல்லும்.
படத்தில் ஒரு சில திருப்புமுனைக் காட்சிகள் வருகின்றன. அவை வரும் இடங்களும், விதமும் மிகவும் இயல்பாகவும், இரசிக்கும்படியும் அமைத்த இயக்குநருக்கு பாராட்டுகள். படத்தின் மற்றுமொரு பலம் – பின்னணி இசை. “அதிகமாக அல்ல – ஆழமாக” என ஒரு இலத்தீன் பழமொழி உண்டு. நீளிரா திரைப்படத்தின் இசையும் அதற்கேற்றவாறு ஆர்ப்பாட்டமில்லாமல் ஆனால் ஆத்மார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் உரையாடல்களும் அவற்றுக்கான மொழிபெயர்ப்பு வசனங்களும் (Subtitles) இருந்தாலும் அவற்றை வாசிக்காமலே பெரும்பாலான காட்சிகளைப் புரிந்துகொள்ளக் கூடியவாறு உள்ளமையும் மற்றுமொரு சிறப்பு.
வெற்றி – தோல்வி எனும் வழக்கமான திரைப்பட முடிவுகளை விட்டு விலகி புதுமையான ஒரு முடிவுடன் சோமிதரனின் நீளிரா.



![]()










