தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கான பாரம்பரிய பலகார (கெவிலி) மேசையைத் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களின் செலவு, 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 இல் 7.0 % ஆல் அதிகரித்துள்ளது.
இது கொரோனா பெருந்தொற்றுக் காலப்பகுதி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முன்னரான 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.5 மடங்கு அதிகமாகும்.
வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இலங்கையின் முன்னணி பொருளாதார ஆய்வுத் தளமான PublicFinance.lk வெளியிட்ட வருடாந்த “அவுருது” பலகாரங்களுக்கான செலவு மதிப்பீட்டில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.
பலகார மேசையில் உள்ள எட்டு பொருட்களில் ஆறின் விலைகள் அதிகரித்துள்ளன. 2026 இல் ஏற்பட்ட 7.0% செலவு அதிகரிப்பிற்கு முக்கியமாக தேங்காய் எண்ணெய் மற்றும் அரிசி மாவின் விலை உயர்வே காரணமாகும். மொத்த அதிகரிப்பில் சுமார் 80% இற்கு இவை இரண்டும் மட்டுமே காரணமாக அமைந்திருந்தன.
இலங்கையின் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஒரு பாரம்பரிய அம்சமாக விளங்கும் கெவிலி (பலகார) மேசையானது, செழுமையையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் பல்வேறு பாரம்பரிய இனிப்பு வகைகளை உள்ளடக்கியதாகும். வ வீட்டுக்கு வீடு இது மாறுபடலாம் என்றாலும், பொதுவாக பால் சோறு, கொக்கிஸ், வாழைப்பழம், அலுவா, பணியாரம், தொதல், பயத்தம் பணியாரம் மற்றும் பட்டர் கேக் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த ஆய்வு நான்கு முதல் ஐந்து பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்குத் தேவையான அளவீடுகளுடன், ‘அப்பே அம்மா’ (Appe Amma) எனும் பிரபலமான யூடியூப் (YouTube) தளத்தின் சமையல் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் முக்கிய பொருட்களின் விலைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன; மின்சாரம், எரிவாயு மற்றும் மசாலா உள்ளீடுகளுக்கான செலவுகள் சேர்க்கப்படவில்லை.
விலை விபரங்கள் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்டுள்ளன. இதற்காக 2019 (ஏப்ரல் 1 வது வாரம்), 2025 (மார்ச் 3 வது வாரம்) மற்றும் 2026 (மார்ச் 4 வது வாரம்) ஆகிய காலப்பகுதிகளில் கொழும்பு மாவட்டத்தில் நிலவிய வெளிச்சந்தை வாராந்த சராசரி சில்லறை விலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










