தேசிய நூலகத்தின் 36 ஆம் ஆண்டு நிறைவு விழாவானது 28.04.2026 அன்று நடைபெற்றது.
தேசிய நூலகத்தின் 36 ஆம் ஆண்டு நிறைவு விழாவில், நூலக மற்றும் தகவல் விஞ்ஞானத் துறையில் மேற்கொண்ட சிறந்த மற்றும் புத்தாக்கத்திற்கான ஆய்வு பங்களிப்புக்காக, மட்டக்களப்பைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட நூலகர் முத்துராஜா ரவிக்குமாருக்கு தேசிய நூலக ஆய்வு விருதானது நிகழ்வின் பிரதம விருந்தினர் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனேவினால் வழங்கப்பட்டது.
இலங்கையின் பல நூலகங்களின் இணைய வழி நூல்பட்டியல் (OPAC – Online Public Access Catalogue) அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒரே தளத்தின் மூலம் நாட்டின் அனைத்து நூலகங்களிலும் உள்ள நூல்களை பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்கள் எளிதாக கண்டறியக்கூடிய நேரடி ஒருங்கிணைந்த வளத் தேடல் அமைப்பை உருவாக்கியதற்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
குறித்த ஆய்வு, நாட்டின் அனைத்து நூலக தரவுத்தளங்களையும் ஒன்றிணைக்கும் தேசிய மட்ட அமைப்பிற்கான அடித்தளத்தை உருவாக்குவதற்காக உள்வாங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இலங்கையின் தேசிய மெய்நிகர் ஒன்றிய நூலக பட்டியல் (National Virtual Union Catalogue of Sri Lanka) உருவாக்க பணிகள் முன்னெடுக்கப்பட்டு தற்போது இது பொதுமக்களின் பாவனைக்காக தேசிய நூலகத்தினால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ் உருவாக்க பணிகளுக்கு இவர் தொழில்நுட்ப ஆலோசகராகவும் சேவையாற்றியுள்ளார்.
இவர் கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞானமானி பட்டதாரியும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தகவல் விஞ்ஞான முதுமானி பட்டதாரியும், தற்போது தகவல் விஞ்ஞான துறையில் கலாநிதி பட்டப்படிப்பையும் மேற்கொண்டு வருவதுடன் கடந்த 20 வருடங்களாக நூலக விஞ்ஞான துறையில் கடமையாற்றி வருகின்றார்.
இவர் இலங்கை நூலக சங்கத்தின் உப தலைவராக சேவையாற்றியுள்ளதுடன் கொழும்பு பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை நூலக சங்கம் போன்றவற்றினால் நடத்தப்படும் தகவல் விஞ்ஞான டிப்ளோமா மற்றும் முதுமானி பட்டப்படிப்புகளின் பகுதி நேர விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார். அத்துடன் 2021ல் இலங்கை நூலக சங்கத்தினால் வழங்கப்பட்ட ஆய்வு விருதையும் 2024ல் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் சிறந்த ஆய்வுக்கான விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நூலக தன்னியக்க செயல்பாடுகளையும் நூலக டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்களையும் நாடு பூராவும் உள்ள நூலகங்களில் மேற்கொண்டு வருகின்றார்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










