நாட்டின் பல பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் நோய் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 237 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நோய் பரவலைத் தடுப்பதற்காக சுத்தமான குடிநீரைப் பயன்படுத்துமாறும், இயலுமானவரை கொதித்தாறிய நீரைப் பருகுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா,
தற்போது பதிவாகும் நோயாளர்களில் பெரும்பாலானோர் வைரஸ் தொற்று காரணமாகவே மூளைக்காய்ச்சல் நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நோய் நிலைமை முதன்முதலில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியில் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரிக்கில்லகஸ்கட, கண்டி, பதுளை, வெலிமடை மற்றும் தியத்தலாவை ஆகிய பகுதிகளிலும் இந்நோய் பரவியுள்ளது.
பதிவாகியுள்ள நோயாளர்களில் பெரும்பான்மையானோர் பாடசாலை மாணவர்கள் ஆவர்.
59 நோயாளர்கள் மாத்திரமே 31.05.2026 அன்று மாலை வரையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏனைய அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி என்பன இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.
இந்த நிலைமையைக் கண்காணித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அசுத்தமான குடிநீர் மூலம் இந்நோய் பரவக்கூடும் என்பதால், சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகளினால் விசேட வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, பாடசாலை மாணவர்கள் தங்களுக்குள் உணவுகளைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்குமாறும், எப்போதும் சுத்தமான மற்றும் கொதித்தாறிய நீரை மாத்திரமே பயன்படுத்துமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










