மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாலின அடிப்படையில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வழக்கு மேலாண்மை மற்றும் சேவைகள் வழங்கும் அரசாங்க அதிகாரிகளுடனும் பரிந்துரை பணிகளில் ஈடுபட்டுள்ள பெண் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக பழைய மாநாட்டு மண்டபத்தில் 03.06.2026 அன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அருணாளினியின் இணைப்பாக்கத்தில் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் ஆதரவுடன் நடைபெற்றது.
பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த பாதுகாப்பு, ஆலோசனை மற்றும் ஆதரவு சேவைகளை வழங்கும் நோக்கில், வழக்கு மேலாண்மை மற்றும் சேவை வழங்கலில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பால்நிலை சமத்துவ ஆலோசகர் வி.வீரசிங்கம் வளவான்மை மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல், நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், வழக்கு பராமரிப்பு நடைமுறைகளில் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி பாதுகாப்பு, உளவியல் ஆலோசனை, சட்ட உதவி மற்றும் சமூக ஆதரவு சேவைகளை திறம்பட வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், பெண்கள் அபிவிருத்தி மையத்தின் திட்ட முகாமையாளர் ஐயவீர அஞ்சலி, செயற்திட்ட அதிகாரி தேவிக்கா நாகவத்த, பெண்கள் அபிவிருத்தி மையத்தின் இணைப்பாளர் ஜே.எஸ்.ரட்ணேஸ்வரி, பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பொலிசார், துறைசார் நிபுணர்கள், மாவட்ட பெண்கள் அதிகார சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும் பாதுகாப்பும் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும் இவ்வாறான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் முக்கிய பங்காற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










