ஐக்கிய நாடுகள் சபையால் நடைமுறைப்படுத்தப்பட்ட டித்வா மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் (Humanitarian Priorities Plan – HPP) நிறைவு நிகழ்வு, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche ஆகியோரின் தலைமையில்11.06.2026 அன்று கொழும்பில் நடைபெற்றது.

வலுவான அரசியல் தலைமைத்துவம் மற்றும் அனர்த்த நிலைமையினை விரைவாக முகாமைத்துவம் செய்தல் ஆகியவை காரணமாக டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான நிவாரணத் திட்டத்தை, வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்ததாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche இங்கு சுட்டிக்காட்டினார்.

வலுவான தேசிய தலைமைத்துவம் மற்றும் பயனுள்ள கூட்டாண்மை மூலம், நெருக்கடியான சூழ்நிலையிலும் மக்களுக்கு மிகவும் நியாயமான முறையிலும் செயற்திறனாகவும் நிவாரணம் வழங்க முடியும் என்பதை இலங்கை நிரூபித்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி இங்கு வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் சபை விரைவாக வழங்கிய துல்லியமான தரவுகள் மற்றும் மதிப்பீடுகள் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு முக்கியமானதாக அமைந்தன என்றும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்காக பன்முகப்படுத்தப்பட்ட முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், தேசிய, மாகாண மற்றும் பிரதேச மட்டங்களில் நிறுவன ரீதியான ஒருங்கிணைப்பை மேலும் விரிவுபடுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பல்வேறு நாடுகளும் தரப்பினர்களும் வழங்கிய தாராளமான மற்றும் உடனடி ஆதரவைப் பாராட்டி, தனது நன்றியைத் தெரிவித்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதை உறுதி செய்வதற்கும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் உதவிய அனைத்து அரச நிறுவனங்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் “டித்வா மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின்” கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்காக 35.4 மில்லியன் டொலர்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகையில் 75% நிவாரண உதவிகள் இந்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்காக பிரதேச செயலகங்கள் ஊடாக 27,000 ரூபா கொடுப்பனவும், தற்காலிக வீடுகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்த மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 09 துறைகளின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் போது 6.5 இலட்சத்திற்கும் அதிகமான இலக்கு வைக்கப்பட்ட மக்கள் தொகையில் 87% இற்கு, அதாவது, 575,000 பேருக்கு நேரடியாக நிவாரணம் வழங்க முடிந்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளது.

இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (அனர்த்த முகாமைத்துவம்) கே. ஜி. தர்மதிலக, வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள், சர்வதேச நிவாரண அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects