மட்டக்களப்பு மாவட்ட விசேட விவசாயக் குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஆர்.சிவநேசன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 11.06.2026 அன்று நடைபெற்றது.
இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை இனங்கண்டு உரிய விவசாயிகளுக்கான நஸ்ட ஈடுகளை வழங்கப்பட்டமையில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், விவசாய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு வங்கிகளினால் மேற்கொள்ளப்படவுள்ள ஊக்குவிப்பு நடைமுறைகள் தொடர்பாகவும் காப்புறுதி கிடைக்காமை, மண் அகழ்வு, வயல்களில் வெள்ளத்தினால் குவிந்த மணலை அகற்றுவது தொடர்பாகவும், விவசாய வீதி அபிவிருத்தி போன்ற மேலும் பல விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
தற்போதைய நீர்ப்பாசன செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கால்வாய்களை மீள்கட்டுமானம் செய்தல், அழிவடைந்த தென்னை பயிர்ச் செய்கையாளர்களுக்காக நஸ்ட ஈடு வழங்குதல், உரத்திற்கான கொடுப்பனவை வழங்குதல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் பல தீர்க்கமான முடிவுகள் இதன் போது எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தொடர்பாகவும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், விவசாய அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜெகன்நாத், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










