டெங்குப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டமொன்று அவசியம் – பிரதமர் தெரிவிப்பு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டெங்குப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டமொன்று அவசியமென்றும், கடந்த கால சவால்களை முறியடித்ததைப் போலவே, டெங்கு எனும் சவாலையும் கூட்டு முயற்சியால் முறியடிக்க வேண்டுமென்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு வாரத்திற்குச் சமாந்தரமாக, டெங்கு நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதையும் பொதுமக்களிடையே சுகாதாரப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இன்று (16.06.2026) கொட்டாவ பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட டெங்கு ஒழிப்பு நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

தற்போது எமது நாட்டில் டெங்கு அபாயம் அதிகரித்து வருகின்றது. கொழும்பு மாவட்டம் அதிக அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்றது. அதிலும் மகரகம நகரம் குறிப்பிடத்தக்க நிலையில் இருப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர்.

குறிப்பாக, பாடசாலைகள், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் டெங்கு அபாயம் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு அரசாங்கம் என்ற வகையில், டெங்கு ஒழிப்பு வாரத்தை அறிவித்து, அந்த வாரத்திற்குள் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள டெங்கு அபாயத்தைக் குறைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வாரத்திற்கு மட்டுமல்லாது, இதற்காக நீண்டகால வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் தருணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியுடன் செயல்பட வேண்டும்.

கடந்த 1 ½ வருடங்களாக நாம் எதிர்கொண்ட சவால்களை வெற்றிகரமாக முறியடித்ததைப் போன்றே, இப்போதும் கூட்டு முயற்சியின் மூலம் இந்தச் சவாலை முறியடிக்க வேண்டும். டெங்கு ஒழிப்புச் செயற்பாட்டைத் தமது சொந்தப் பொறுப்பாகக் கருதி, முதலில் கொழும்பு மாவட்டத்தை அதிக அபாயத்திலிருந்து குறைந்த அபாயமுள்ள பிரதேசமாக மாற்றி, படிப்படியாக இந்நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கொட்டாவ பஸ் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேரில் சென்று பார்வையிட்டார்.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மகரகம நகர சபைத் தலைவர் சமன் சமரகோன்,

இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு விசேட பங்களிப்பை வழங்கிய கொட்டாவ நகர சபை, கொட்டாவ பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர், மகரகம பிரதேச செயலகம், பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகம், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, காணிப் பதிவு அலுவலகம், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, கொட்டாவ தர்மபால வித்தியாலயம், கொட்டாவ ஆனந்த வித்தியாலயம் மற்றும் கொட்டாவ வர்த்தக சங்கம் உள்ளிட்ட தரப்பினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கம்லத், பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, மகரகம நகர சபைத் தலைவர் சமன் சமரகோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(பிரதமர் ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects