இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலப்பகுதிக்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) 16.06.2026 அன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
2026-2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) என்பது, 2025 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை வழிகாட்டலுக்கு இணங்க, நாட்டின் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்துவதையும், ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதையும் நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு முதன்மையான தேசிய வேலைத்திட்டமாகும். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழும், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைமையின் கீழும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கொள்கை அடிப்படையிலான கடன் (PBL) வேலைத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் இந்த மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும், 2030ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற லட்சியமான மற்றும் யதார்த்தமான ஏற்றுமதி வருவாய் இலக்கை அடைவதற்கும் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய, 2026 மே 4 அன்று அமைச்சரவையினால் இத்திட்டம் உத்தியோகபூர்வ மூலோபாயக் கட்டமைப்பாக அங்கீகரிக்கப்பட்டது. இலங்கை பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்குச் சேவையாற்றும் ஒரு போட்டித்தன்மைமிக்க, விநியோகச் சங்கிலி (Logistics) மற்றும் அறிவு சார்ந்த ஏற்றுமதி மையமாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த மூலோபாயத் திட்டம் ஆறு ‘கிடைமட்டப் பிரிவுகள்’ (Horizontals) மற்றும் எட்டு ‘முன்னுரிமைப் பிரிவுகள்’ (Verticals) ஆகிய இரண்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட முக்கிய தூண்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசியத் திட்டத்தைத் தயாரிப்பதில் அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்களித்துள்ளனர். வலுவான நிர்வாகம் மற்றும் கண்காணிப்புக் கட்டமைப்பின் ஆதரவுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும், நாட்டின் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்த ஆரம்ப விழாவில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ ,கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன உட்பட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர , டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய உட்பட பல அமைச்சுகளின் செயலாளர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) மேலாண்மைப் பணிப்பாளர் ஷானன் கௌலின் (Shannon Cowlin) அவர்கள், சிரேஷ்ட பொதுத்துறை பொருளாதார நிபுணர் நைடா முக்தார் (Nyda Mukhtar) அவர்கள், ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க உட்பட சிரேஷ்ட அரச அதிகாரிகளும், ஏற்றுமதியாளர்கள், தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் உள்ளிட்ட பல கௌரவ விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










