திரைப்பட சுற்றுலாத் துறைக்காக ‘ஒற்றைச் சாளர’ அனுமதி முறைமை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டின் திரைப்பட சுற்றுலாத் துறைக்காக ‘ஒற்றைச் சாளர’ (Single Window) அனுமதி முறையொன்றை நிறுவுவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் 30.06.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின் போது ஒற்றைச் சாளர அனுமதி முறையை நிறுவுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கையில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரங்கள், பாடல்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளின் தயாரிப்புகளுக்காக அனுமதி கோரும் விண்ணப்பதாரர்கள், பல அரச நிறுவனங்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக அனுமதி பெறும் செயல்முறை நீண்ட மற்றும் தாமதமான ஒன்றாக மாறியுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது.

எனவே, ஒற்றைச் சாளர அனுமதி முறையொன்றை நிறுவுவதற்குத் தேவையான முறையான வேலைத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

முன்மொழியப்பட்ட இந்த முறைமை குறித்து பொதுவான உடன்பாட்டுக்கு வருதல், அதனைச் செயல்படுத்துவதில் ஏற்படக்கூடிய சவால்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளைத் தீர்மானித்தல் மற்றும் அதனைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு குறித்தும் இங்கு விரிவான கவனம் செலுத்தப்பட்டது.

இந்த ஒற்றைச் சாளர அனுமதி முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதன் மூலம், உலகளவில் திரைப்படங்கள் மற்றும் ஏனைய படப்பிடிப்புகளுக்கு இலங்கை மிகவும் பொருத்தமானதொரு இடமாக மாறும் என்றும், திரைப்படத் துறையின் போட்டித்திறனை மேம்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இக் கலந்துரையாடலில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் தம்மிகா கே. விஜயசிங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் டி. அனோஜா கமகே, வன வளப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. டபிள்யூ. எம். பி. எஸ். சி. பாலமக்கும்புர, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) டபிள்யூ. எம். ஏ. எஸ். விக்ரமசிங்க, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சஞ்சய நிரோஷன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வி. பி. எதிரிசிங்க, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ருவன் பிரேமவீர உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவினரின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சுற்றுலா மற்றும் திரைப்படத் துறையுடன் தொடர்புடைய பலர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects