எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு முதன்முறையாகக் கூடியது!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ (El-Niño) காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு முதன்முறையாக 30.06.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

உணவுப் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம் மற்றும் வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்குத் தேவையான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்களைத் தயாரித்தல், அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுச் செயல்பாடுகளை உறுதி செய்தல், அத்துடன் பொதுமக்களைத் தெளிவுபடுத்தி அனர்த்த அபாயத்தைக் குறைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை எடுத்தல் போன்ற நோக்கங்களுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்வினால் இந்த விசேட அமைச்சரவை உபகுழுவும் அதிகாரிகள் குழுவும் நியமிக்கப்பட்டன.

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக, வர்த்தகம், வாணிப , உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோர் இந்த அமைச்சரவை உபகுழுவில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

இந்தக் கலந்துரையாடலுடன் இணைந்தாக, அதிகாரிகள் குழுவிற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

எல்-நினோ நிலைமை தொடர்பாக தற்போதுள்ள தரவுகளின்படி, கடுமையான தாக்கத்திற்கான சாத்தியக்கூறு 63% ஆகவும், பலவீனமான தாக்கத்திற்கான சாத்தியக்கூறு 33% ஆகவும் இருப்பது இதன்போது தெரியவந்தது.

இந்த நிலைமையின் கீழ் குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உலகளாவிய எல்-நினோ நிலைமையால் இலங்கையில் வறட்சி அல்லது மழை வீழ்ச்சி அதிகரிக்கவோ அல்லது குறையவோ கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதால், அந்த அனைத்து நிலைமைகளையும் எதிர்கொள்வதற்குப் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முறையான வேலைத்திட்டம் ஒன்றை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

எல்-நினோ நிலைமை தொடர்பில் வெளியிடப்படும் வெவ்வேறுபட்ட அறிவிப்புகளுக்குப் பதிலாக, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மாத்திரம் உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் விசேட அமைச்சரவை உபகுழுவின் செயலாளரும் அழைப்பாளரும், அதிகாரிகள் குழுவின் தலைவருமான ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அஞ்சலி குமாரதுங்க, விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்க, வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே. ஏ. விமலேந்திரராஜா, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் குமுதுலால் போகஹவத்த ஆகியோர் உட்பட சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects