கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதித் தேவைகள் குறித்து கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 07.07.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஏற்றுமதி விவசாயத் திணைக்களம், அறுவடைக்குப் பின்னரான தேசிய முகாமைத்துவ நிறுவகம் உள்ளிட்ட நிறுவனங்களால் 2026 ஆம் ஆண்டிலே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு தனித்தனியாக ஆராயப்பட்டதுடன், செயற்திறன் மற்றும் உற்பத்தித் திறனுக்கு அமைவாக மறுசீரமைப்புக்குட்படுத்த வேண்டிய நிறுவனங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களினால் பராமரிக்கப்படும் அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும் மாவட்ட மட்டத்தில் நிறுவப்பட்ட ஒரு அலகின் மூலம் ஒழுங்குபடுத்தவும், நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன மறுசீரமைப்புகளை வரைபடமாக்கவும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார்.
2026 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாய மற்றும் கைத்தொழில் துறைகளில் இளம் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் குறைந்த வட்டி வங்கி கடன் வசதிகளை இளைஞர்கள் மத்தியில் மேலும் பிரபலப்படுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.
தற்போது பல்வேறு அமைச்சுக்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் விரிவாக்கல் சேவைகளை ஒருங்கிணைத்து, முறைப்படி முன்னெடுத்துச் செல்வது தொடர்பான முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும், மாகாண சபைகளுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் தடையின்றி பணிகளை முன்னெடுப்பதற்காக தொடர்புடைய துறைகள் தொடர்பாக தனித்தனியாகக் கலந்துரையாடல்களை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, ஏற்றுமதி விவசாயப் பயிர்களை மேம்படுத்துவதற்கும் அது சார்ந்த உற்பத்திகளை அதிகரிப்பதற்கும் புதிய முன்மொழிவுகள் மற்றும் திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
கடந்த காலங்களில் வெளிநாட்டு கடன் உதவிகளின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களின் தேவை குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், அவை நிறைவடைய வேண்டிய காலத்தை விடவும் தாமதமாகியுள்ளதால், அந்தத் திட்டங்களின் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். அத்துடன், எதிர்காலத்தில் வெளிநாட்டு கடன்களின் கீழ் ஆரம்பிக்கப்படும் எந்தவொரு திட்டமும் அதன் இறுதி பெறுபேறு குறித்த முறையான தெளிவு இல்லாமல் அங்கீகரிக்கப்படக் கூடாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட சில திட்டங்கள் உரிய நேரத்தில் நிறைவடையாததால் அரசாங்கத்திற்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன், திட்டங்களை உரிய காலத்தில் முடிக்காத திட்டப் பணிப்பாளர்களைக் கருப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்தும் பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதேபோல், நீண்டகாலமாக எவ்வித பலனுமின்றி முன்னெடுக்கப்பட்டு வரும் காலாவதியான திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை இரத்து செய்து, அப் பணிகளை மேலும் பயனுள்ள விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்த, தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, கமத்தொழில், கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, வலுசக்தி அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரசல் அபொன்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி.விக்ரமசிங்க ஆகியோருடன் நிதி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










