பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கும் நிகழ்வு!

Tamil
 – 
ta

எங்களால் செய்ய முடிந்தால் பதவியில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் செய்யக்கூடிய ஒருவரிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு வெளியேறிவிடவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபையின் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு 30.01.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக தாயும் சிசுவும் ஒன்றாக இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் வை.திவாகர், தனது தலைமை உரையில், இருக்கின்ற மனிதவளம் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் பயன்படுத்தி எவ்வாறு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிட்டார். அத்துடன் சுகாதாரத்துறை மீது சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சுகாதாரத்துறை அடிமட்டத்திலிருந்து எவ்வாறு இங்கு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதையும் அதனை அனைவரும் மறந்துவிட்டனர் என்றும் வேதனையுடன் சுட்டிக்காட்டினார். நாட்டின் முதன்மை பிரச்சினையாக ஊழல் கூறப்பட்டாலும், வினைத்திறனற்ற பணியாற்றுகையே முதன்மையானது என்று குறிப்பிட்ட மருத்துவ அத்தியட்சகர் ‘சும்மா இருப்பதையே’ அதிகளவானர்கள் விரும்புகின்றனர் எனவும் அவர்கள் தொடர்பில் யாரும் அலட்டிக்கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், தனது சிறப்பு விருந்தினர் உரையில், 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் பதவிக்கு வந்ததாகவும் அப்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஓய்வுபெற்ற மூவரே மருத்துவ அதிகாரிகளாகப் பணியாற்றியதாகவும் இன்று 350 பேர் பணியாற்றுக்கின்ற நிலைமைக்கு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை சாம்பலிருந்தே மீண்டெழுந்திருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும் தெல்லிப்பழை, பருத்தித்துறை ஆதார மருத்துவமனைகள் ஓரளவு சிறப்பாக இயங்குகின்றமையால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் நெருக்கடிக்களை குறைக்க முடிந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை மருத்துவமனைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக போதனா மருத்துவமனையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆளணி மீளாய்வு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஆளுநரிடம் அவர் கோரிக்கை முன்வைத்தார். மேலும் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்ட சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஒட்டுமொத்த வடக்கு மாகாணத்துக்கும் சேவைகளை வழங்கும் எனவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். முக்கியமாக கடந்த டிசெம்பர் மாதம் பரவிய எலிக்காய்ச்சலை இங்குள்ள மருத்துவர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் மற்றும் பொதுச் சுகாதாரத்துறையினர் இணைந்து கட்டுப்படுத்தினர் என்றும் இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு மிகச் சிறந்த பாராட்டைத் தெரிவித்துள்ளது எனவும் குறிப்பிட்ட அவர், இது உங்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார்.

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், ஓரிடத்தின் தலைமைத்துவத்தில்தான் அதன் வெற்றி தங்கியிருக்கின்றது என்பது உண்மை. உங்கள் மருத்துவ அத்தியட்சகர் திவாகர், தெல்லிப்பழை மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக இருந்தபோது அதை வளப்படுத்தி திறம்ப இயக்கினார். தற்போது இந்த மருத்துவமனையை திறம்பட இயக்குகின்றார். அவர் முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் ஓயமாட்டார். அத்தியட்சகர் தனது தலைமை உரையில் குறிப்பிட்டதைப்போன்று அலுவலகங்களில் ‘சும்மா இருப்பவர்கள்’தான் இன்று அதிகமாகிக்கொண்டு செல்கின்றனர்.

என்னைச் சந்திக்கும் பொதுமக்களும் அதனைத்தான் சொல்கின்றனர். ஓர் அலுவலகத்துக்குச் சென்றால் இருவர் வேலை செய்வார்கள். ஏனையோர் பேசாமல் இருப்பார்கள் என்று முறையிடுகின்றார்கள். இதுபோதாது என்று எதிர்மறையாகச் சிந்திக்கும் அலுவலர்களும் அதிகமாகின்றது. ‘முடியாது’ என்ற வார்த்தைதான் அவர்களிடமிருந்து வருகின்றனது. தாம் எதையும் எம்மால் செய்ய முடியும் என நினைக்கவேண்டும். அல்லது அதை எப்படிச் செய்யலாம் என்பதைச் சிந்திக்கவேண்டும். அப்போதுதான் நாம் முன்னேற முடியும்.

என்னை அரசியலுக்கு அழைத்துவருவதற்கு சிலர் கடந்த காலங்களில் முயற்சித்தார்கள். நான் அதை அடியோடு மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதுமில்லை. எனக்கு அந்த எண்ணமும் இல்லை.

ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நாம் மாற்றுத் திட்டங்களை தயாரிக்கவேண்டும். இந்த மருத்துவமனையின் ஏனைய தேவைகளில் எங்களால் செய்து தரக் கூடியவற்றை விரைந்து செய்து தருவோம், என்றார் ஆளுநர்.

நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி, பருத்தித்துறை பிரதேச செயலர் எஸ்.சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects