“வரி சக்தி 2026” தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச வருமானம் ஈட்டுதலை வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் எதிர்கால அபிவிருத்திச் செயல்முறையை விரைவுபடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வரி சக்தி 2026” தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் 06.07.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வரி விதிப்பு தொடர்பாக பொதுமக்களிடையே உள்ள எதிர்மறையான எண்ணத்தை நேர்மறையான எண்ணமாக மாற்றி, நாட்டில் சுயமாக வரி செலுத்தும் கலாசாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் “வரி சக்தி 2026” என்பது ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஒரு வேலைத்திட்டமாகும். இதன் ஆரம்பத்தைக் குறிக்கும் விசேட தேசிய வரி வாரம் இன்று (06) முதல் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு இணையாக ஊடக மற்றும் ஊக்கப்படுத்தல் வேலைத்திட்டமொன்றும் செயல்படுத்தப்படுவதுடன், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற பல்வேறு பிரச்சாரத் திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து, வரி இணக்கத்தன்மையை மேம்படுத்துவதற்காக பொதுமக்களை நேரடியாக விழிப்புணர்வூட்டல் இடம்பெறும்.

இதன் ஆரம்ப நிகழ்வின் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, “வரி சக்தி 2026” என்பது வெறும் வரிகளை வசூலிக்கும் செயற்பாடு மாத்திரமன்றி, அது நாட்டை நேசிக்கும் மற்றும் பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டமாகும் என்று குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன,

இன்றைய நாள், எமது நாட்டின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக மிக முக்கியமானதொரு படியை எடுத்து வைக்கும் ஒரு நாளாகும். எந்தவொரு இறையாண்மையுள்ள தேசத்தினதும் இருப்பும் பலமும் அந்த நாட்டில் உள்ள பொருளாதார சுதந்திரத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் வருமானம் ஈட்டலையும் நாட்டின் அபிவிருத்திச் செயல்முறையையும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய கருவியாக வரிவிதிப்பு காணப்படுகிறது.

ஆனால், பெரும்பாலான நேரங்களில் மக்களிடையே வரி தொடர்பாக எதிர்மறையானதொரு எண்ணமே காணப்படுகிறது. வரிகளை வசூலிப்பவர்களாலும் ஆட்சியாளர்களினாலும் தான் அந்த எதிர்மறையான எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டது. எனினும், மக்களுக்கு தேசிய உணர்வு ஏற்படும் நாளில், மக்கள் மாறத் தொடங்குவார்கள்.

வரி என்பது ஒரு சுமை என்றே மக்கள் நினைத்தார்கள். வரலாற்றில் பெருமளவில் வரி ஏய்ப்புகள் இடம்பெற்றதை நாம் கண்டுள்ளோம். அதற்கு அரசியல் ஆதரவு கிடைத்தது என்பதை விருப்பமில்லாவிட்டாலும் கூறித்தான் ஆக வேண்டும்.

மக்களின் வரிப்பணத்திற்கு என்ன நடந்தது என்று அன்று மக்களுக்குத் தெரியவில்லை. வரி செலுத்தும் மக்களுக்கு தெளிவான தொலைநோக்கு பார்வை இருக்கவில்லை. இந்நிலையை மாற்றி, வரி செலுத்துவது குறித்து மக்கள் மத்தியில் நேர்மறையான மனப்பாங்கை ஏற்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் செயல்பட்டுள்ளது. அரசாங்கம் நாட்டுக்காக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்குப் பங்களிப்பு வழங்கும் வரி செலுத்தும் மக்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் எனது கௌரவத்தை தெரிவிக்கிறேன்.

நாம் செலுத்தும் பணத்திற்குப் பிரதிபலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்று மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி இன்று நாட்டில் அதிவேகப் பாதைகள், வீதிகள், மின்சார விநியோகத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எவரிடமிருந்தும் கடன் பெறாமல் கண்டி அதிவேகப் பாதையின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையிட்டு இன்று மக்கள் பெருமை அடைகின்றனர். குருணாகல் – கலேவெல வீதியின் பணிகளை ஆரம்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து கடன்பெறாமல் உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் நாடாக இன்று நாம் பலமடைந்துள்ளோம்.

பண்டைய காலத்தில் பாரிய விகாரைகள், குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் அனைத்தும் மக்களின் கூட்டுப் பங்களிப்பினாலேயே உருவாக்கப்பட்டன. இந்நாட்டை அபிவிருத்தி செய்து, வளமான தேசமாக மாற்றியமைக்க கூட்டு முயற்சியால் மாத்திரமே முடியும். அதேபோல், இன்று வரியாகச் சேகரிக்கப்படும் இந்தப் பணம் நாட்டு மக்களின் நலன்புரிச் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ‘டித்வா’ சூறாவளிப் பாதிப்புகளின் போது 50,000 கோடியை ஒதுக்கியதன் மூலம் அது நிரூபிக்கப்பட்டது. அத்துடன், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் இன்று மக்களுக்குப் பெருமளவிலான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன. கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. இவையனைத்தும் உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பணிகளாகும்.

வரிப்பணத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள், நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் என இவையனைத்தும் குறித்து உண்மைத் தகவல்கள் நாட்டு மக்களிடையே கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம், இந்த வரிப்பணப் பயன்பாட்டின் வெளிப்படைத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும். அது மிகவும் முக்கியமானது. எனவே, இந்தத் தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் நாம் எதிர்பார்ப்பது வரி அடிப்படையை விரிவுபடுத்துவதாகும். வரி இணக்கத்தன்மையை அதிகரித்து, வரி ஏய்ப்புகளைக் குறைத்துக் கொள்வதற்காக மக்கள் மத்தியில் நேர்மறையான மனப்பாங்கை உருவாக்குவதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அனைவரும் வரி செலுத்துவார்களாயின், ஏனையவர்கள் மீது சுமத்தப்படும் வரிச்சுமையைக் குறைக்க முடியும்.

தேன்கூட்டை உருவாக்க நாம் ஒரு தேனீயிடம் மட்டும் கூறுவதில்லை. ஆயிரக்கணக்கான தேனீக்கள் ஒன்றிணைந்தே அந்தத் தேன்கூட்டை உருவாக்குகின்றன. அது ஒரு மிகச் சிறந்த படைப்பாக மாறுகிறது. அது தனி ஒரு தேனீ செய்யும் செயலல்ல, ஒட்டுமொத்த தேனீ சமூகத்தினால் உருவாக்கப்பட்டது. எனவே, “வரி சக்தி 2026” என்பது வெறுமனே வரி சேகரிக்கும் ஒரு செயற்பாடு மட்டுமல்ல, அது நாட்டை நேசிக்கும் மற்றும் பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்கும் ஒரு தேசிய வேலைத்திட்டமாகும். இந்த உன்னதமான பணியை வெற்றிகரமாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ
நாட்டின் பிரஜைகளாக வரிவிதிப்பு குறித்துப் புரிந்துகொள்வதன் மூலம், நாட்டை பொருளாதார மற்றும் சமூகப் பரிமாற்றத்தை நோக்கிய பயணத்திற்கு நமது பங்களிப்பை மிக உயர்ந்த அளவில் வழங்க முடியும்.

பிரஜைகளாகிய நம் அனைவருக்கும் பல தனிப்பட்ட இலக்குகளும் செயற்பாடுகளும் உள்ளன.

ஆனால், அந்தத் தனிப்பட்ட இலக்குகளைத் தனித்தனியாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நாம் நினைத்தாலும், அவற்றில் பெரும்பாலானவற்றைத் தனித்து நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஒரு பொதுச் சமூகத்தின் வெற்றி என்பது பரஸ்பர ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது.

இன்று வரி செலுத்தும் முறைமை ஒரு இலகுவான செயல்முறையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் வரி வசூலிக்கும் முறை இன்று முறையாக நடைபெறுகிறது. அதேபோன்று, நியாயமான முறையில் வசூலிக்கப்படும் அந்தப் பணத்தை மிகவும் சிக்கனமாக சமூகத்தின் நலனுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்ற பொறுப்பை அரசாங்கம் இனம் கண்டுள்ளது. அந்த நிதி ஒழுக்கத்தை முறையாக முன்வைக்கத் தவறினால், மக்கள் வரி செலுத்த மாட்டார்கள். கடந்த காலத்தில் அது நடந்துள்ளது. எனவே, உயர்ந்த நிதி ஒழுக்கத்துடன் வரி வசூலிக்கும் செயல்முறையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயங்களுக்கு நாம் இடமளிக்க மாட்டோம். எனவே, நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் நாம் அனைவரும் உணர்வுடன் இப்பணியில் பங்களிக்க வேண்டும். அது சட்டத்தினால் நடைபெற வேண்டியதில்லை. எனவே, நாட்டின் அனைத்து மக்களும் தங்களது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுவார்கள் என நாம் நம்புகிறோம்.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, சுங்கப் பணிப்பாளர் நாயகம் விமல் லியனகம, மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ ஆகியோரும் இங்கு தமது கருத்துகளை முன்வைத்தனர்.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மற்றும் ஜனாதிபதி அலுவலகம், நிதி அமைச்சு, இலங்கைச் சுங்கம், மதுவரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள், வரி செலுத்துவோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects