2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராமாகவும், தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் உயர்த்துவதற்கான தேசிய இலக்கை அடையும் நோக்கில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் “சிலோன் டீ கிராமம்” (Ceylon Tea Village) 500 தேயிலைக் கிராமங்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய வேலைத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டிற்குள் நாடளாவிய ரீதியில் உள்ள 144 தேயிலை பரிசோதகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் 144 தேயிலைக் கிராமங்களை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு இணையாக, பதுளை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மாதிரி கிராமமான ஹாலி எல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பஹமுணுகொட கிராம உத்தியோகத்தர் பிரிவின் உடகம கிராமத்தில் 15.07.2026 அன்று ஆரம்ப விழா நடைபெற்றது.
இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கை தேயிலை சபையின் உயர் அதிகாரிகள், உள்ளூர் அரசியல் தலைவர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்த தேசிய வேலைத்திட்டமானது இலங்கையின் சிறு தேயிலை தோட்டத்துறையின் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒரு முக்கிய படியாகும் என்பதுடன், இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, தேயிலை தொழில்துறையை நவீனமயமாக்குவது மற்றும் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவது என்பன எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இது 2030 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் ஒரு பலமான பங்களிப்பை வழங்கும்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










