2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது.
மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்குரிய வினாக்கள் அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறானவற்றைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளும், பாட ரீதியான விரிவுரைகளும், கருத்தரங்குகளும்,செயலமர்வுகளும் நடத்துவது நாளை (04.08.2026) நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக, குறித்த பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கான அனுமான வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் அவற்றை விநியோகித்தல் என்பனவற்றை மேற்கொள்ளவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்கான வினாக்கள் வழங்கப்படும் அல்லது அதற்கு நிகரான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மின்னணு அல்லது அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறான பொருட்களைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2026 ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை 2532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









