மட்டக்களப்பு, பாசிக்குடா: பாசிக்குடா கடல் மற்றும் கடலோர சுற்றுலா இலக்கை நிலையான, மீள்திறன் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கலந்துரையாடல் ஒன்று 06.08.2026 அன்று பாசிக்குடாவில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பணிப்பின் கீழ், வறுமை ஆய்வு மையம் (CEPA) முன்னெடுத்து வரும் பாசிக்குடா கடல் மற்றும் கடலோர சுற்றுலா இலக்கு திட்டமிடல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்குதாரர்களின் பங்கேற்புடன் பாசிக்குடா சுற்றுலாத் தலத்தை திட்டமிட்டு அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
CEPA நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விஞ்ஞான, கல்விசார் மற்றும் சமூக அடிப்படையிலான ஆய்வுகளின் கண்டறிதல்கள் இதன்போது முன்வைக்கப்பட்டதுடன், பாசிக்குடா சுற்றுலாத்துறையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் தொழில்சார் மற்றும் கல்விசார் தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் பெறப்பட்டன.
மேலும், கடல் மற்றும் கடலோர வளங்களைப் பாதுகாத்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிலையான சுற்றுலா அபிவிருத்தியை முன்னெடுப்பது, உள்ளூர் சமூகங்களின் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் தனியார் துறையின் பங்களிப்பை வலுப்படுத்துவது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தவிசாளர், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உத்தியோகத்தர்கள், CEPA நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலானது, பாசிக்குடாவை எதிர்காலத்தில் நிலையானதும், உள்ளடக்கமானதும், மீள்திறன் கொண்டதுமான முக்கிய சுற்றுலா இலக்காக உருவாக்குவதற்கான முக்கியமான ஆலோசனைகளை வழங்கிய நிகழ்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()







