ஜனாதிபதிக்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் சந்திப்பு!

நெல்லுக்காக விவசாயிக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வது குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது 11.08.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இத்துறையில் செயற்படும்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அவர்கள் இங்கு ஜனாதிபதிக்குத் தெரிவித்ததுடன், நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஈட்டுக் கடன் முறைமையின் கீழ் வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது முகங்கொடுக்க நேர்ந்துள்ள சிரமங்கள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு அறிவித்தனர்.

நெல் கொள்வனவு செய்வதற்காக மாவட்டச் செயலாளர் அல்லது பிரதேச செயலாளர் ஊடாக நிதி ஒதுக்கீடுகளை வழங்கும் வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அவர்கள் இங்கு பரிந்துரைத்துள்ளனர்.

அதேநேரம் நெல் கொள்வனவு செய்வதற்குத் தங்களிடம் போதுமான கொள்ளளவு உள்ளதாகவும், விவசாயிகளுக்கு நிலையான விலையை வழங்குவதற்கும் நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதிப்படுத்துவதற்கும் இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் என்றும் சுட்டிக்காட்டினர்.

நெல் கொள்வனவு செய்வதற்காக மாவட்டச் செயலாளர்கள் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக, இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

இதன்படி, ஒரு கிலோகிராம் நெல் 120 ரூபாய் குறைந்தபட்ச விலையின் கீழ் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட வேண்டும் எனவும், ஒரு விவசாயியிடமிருந்து கொள்வனவு செய்யக்கூடிய அதிகூடிய நெல் அளவு ஹெக்டயருக்கு 4,000 கிலோகிராம் ஆக இருக்க வேண்டும் எனவும், கொள்வனவு செய்யப்படும் நெல் தொகைகள் மற்றும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் குறித்த சரியான ஆவணங்களைப் பேணுவது கட்டாயமானது எனவும், குறித்த அறிக்கைகள் தொடர்ச்சியாகப் பரிசோதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக் கடன் திட்டமானது தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், அரிசியை விற்பனை செய்த பின்னர் உரிய தொகையை அரசாங்கத்திற்கு மீளச் செலுத்த வேண்டும் எனவும், இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஆலை உரிமையாளர்களுக்கு எதிர்வரும் போகங்களிலும் இத்தகைய சலுகைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்து சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதுடன், இது நாட்டின் உணவுப் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் பொறுப்பு வாய்ந்த பணியாகக் கருதி செயற்பட வேண்டுமெனவும் இதன்போது மேலும் குறிப்பிடப்பட்டது.

மேலும், இதற்கு முன்பு செயல்படுத்தப்பட்ட இது போன்ற திட்டங்களின் போது கடன் திருப்பிச் செலுத்தப்படாமையால் எழுந்த சிக்கல்கள் குறித்தும் நிதி அமைச்சின் அதிகாரிகள் இங்கு விளக்கமளித்தனர்.

இதற்கு முன்பு அரசாங்கத்தால் கடன் வழங்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டதுடன், அந்த நெல்லை மீண்டும் அரசாங்கம் விலைக்கு வாங்க வேண்டும் என்ற முறையே நடைமுறையில் இருந்தது. எனினும், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய நெல் கொள்முதல் செய்வதற்காக கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டமை பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்ட நெல் ஆலை உரிமையாளர்கள், இம்முறை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால் தற்போது தொழிலிலிருந்து விலகியிருக்கும் பெருமளவிலான சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மீண்டும் இத்துறையில் ஈடுபடுவதுடன், நெல்லுக்கான நியாயமான விலையையும் வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுல பின்னலந்த ஆகியோருடன், நிதி அமைச்சின் அதிகாரிகள், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, கண்டி, இரத்தினபுரி, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects