நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91,000 ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாடு பிரிவு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
தேசிய டெங்கு கண்காணிப்பு அமைப்பின் அண்மைக்கால அறிக்கையின்படி, நாட்டில் இதுவரை மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தின் முதல் 12 நாட்களுக்குள் மாத்திரம் 5,714 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதத்தில் மட்டும் 29,971 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதுவே இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவான எண்ணிக்கையாகும்.
தற்போது இறப்பு விகிதம் 0.075 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
நாட்டிலேயே அதிகளவாக 19,406 நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இது மொத்த நோயளார்களில் 21.31 சதவீதமாகும்.
கொழும்பு மாவட்டத்தில் 18,101 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது மொத்த நோயளார்களில் 19.88 சதவீதமாகும்.
இவ்விரு மாவட்டங்களிலும் சேர்த்து மட்டும் 37,500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தேசிய ரீதியில் பதிவான மொத்தப் பாதிப்பில் 41 சதவீதத்திற்கும் அதிகமான பங்காகும்.
நாடளாவிய ரீதியில் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் ‘அதிதீவிர அபாயப் பகுதிகளாக’ அடையாளம் காணப்பட்டுள்ளன. வாராந்த சராசரியாக நாளொன்றுக்கு 1,509 புதிய தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சூழலைத் தூய்மையாகப் பேணி, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பொதுமக்களுக்குச் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








