களுத்துறை நாகொட வைத்தியசாலையில் நவீனமயமாக்கப்பட்ட பிரிவுகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு!

ரூபா 134 மில்லியனுக்கும் அதிகமான செலவில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் நவீனமயமாக்கப்பட்ட பிரிவுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பலவற்றை 16.08.2026 அன்று நோயாளர் பராமரிப்பு சேவைகளுக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டார்.

இதன் கீழ், வெளிநோயாளர் பிரிவு, பிரதான மருந்தகம், கிளினிக்குகள், 21 மற்றும் 22ஆம் இலக்க வார்டுகள், சுகாதாரக் கல்வி மற்றும் பொது சுகாதாரக் கட்டிடம், மனநல சிகிச்சைப் பிரிவு, மருத்துவர்கள் விடுதி, தாதியர்கள் மற்றும் கனிஷ்ட ஊழியர்களுக்கான ஓய்வறைகள் ஆகியவை புனரமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிற்றூழியர் நிர்வாக அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டதுடன், பழுதுபார்க்கப்பட்ட முச்சக்கர வண்டியொன்றும் வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.

அரச நிதியை முறையாக முகாமைத்துவம் செய்வதன் மூலம் சுகாதாரத் துறைக்குத் தேவையான மனித வளத்தை ஆட்சேர்ப்பு செய்ய முடிந்துள்ளதாகவும், இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வைத்தியசாலை நிர்மாணப் பணிகளை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்வதற்காக ரூ. 45 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார் .

மேலும், ரூ. 3,150 மில்லியன் செலவில் அதிநவீன 16 கெத் ஆய்வகங்கள் பிரதான வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்கும், CT மற்றும் MRI இயந்திரங்கள் உள்ளிட்ட நவீன மருத்துவ உபகரணங்களை வைத்தியசாலை அமைப்பில் இணைப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார, களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மதுபாஷினி கருணாரத்ன, பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் நயனஜித் கொமசாரு ஆகியோருடன், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects