இலங்கை சுற்றுலாத்துறையில் பயணிகள் ட்ரோன் சேவையை ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை முதன்மையாக கொண்டு பயணிகள் ட்ரோன் சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு வளாகத்தில் 18.08.2026 அன்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்,

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவையை ஆரம்பிப்பதன் முக்கிய நோக்கம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன் அவசர பேரிடர் சேவைகள் மற்றும் கடற்படை தேவைகளை பூர்த்தி செய்வதாகும்.

இருப்பினும் வணிக ரீதியாக இச்சேவையைத் தொடங்குவதற்கு முன் வான்பாதுகாப்பு, ஒழுங்குமுறை கட்டமைப்பு, வான் போக்குவரத்து கட்டுப்பாடு, அவசரகால செயல்பாடுகள், சைபர் பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு மற்றும் தரையிறங்கும் இடங்கள் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் அனுமதி கட்டாயமாகும்.

மேலும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பாதுகாப்பு அமைச்சு விமானப்படை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு முதலீட்டு சபை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

இக் கலந்துரையாடலின்போது ஈ-ஹேங் நிறுவன அதிகாரிகள் பயணிகள் ட்ரோன்களின் eVTOL (electric Vertical Takeoff and Landing) தொழில்நுட்பம் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.

மின்சாரத்தில் இயங்கும் இந்த யாத்திரிகர் ட்ரோன்கள் செங்குத்தாக மேலே எழும்பவும் தரையிறங்கவும் கூடியவை என்பதால், தரையிறங்குவதற்கு 900 சதுர மீட்டருக்கும் குறைவான இடமே போதுமானது. இரண்டு பயணிகள் பயணிக்கக்கூடிய இந்த ட்ரோன்களில் 16 விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், அவசர காலத்தில் 4 விசிறிகள் இயங்கினாலே பாதுகாப்பாக தரையிறங்க முடியும்.

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மத்திய கட்டுப்பாட்டு அறையிலிருந்து தானியங்கி முறையில் இவை இயக்கப்படுவதுடன், 12 பேட்டரி தொகுதிகள் மற்றும் 3 வான் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டுள்ளதால் உயர்மட்ட பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் உறுதி செய்யப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பயணிக்கும் ஒரு சுற்றுலாப் பயணிக்கு, ஒரு பயணத்திற்கு 20 முதல் 30 அமெரிக்க டொலர்கள் வரை மட்டுமே செலவாகும் என ஈ-ஹேங் நிறுவனம் தெரிவித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக சிகிரியா, பிதுரங்கலா போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கொழும்பு நகரம் மற்றும் துறைமுக நகரம் ஆகியவற்றில் இச்சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக துறைமுக நகரத்தில் மாதிரி மண்டலமொன்றை உருவாக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில், பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ. டபிள்யூ. எஸ். மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் சீனாவின் EHang நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects