கொழும்பு தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் (National Institute of Sports Science) அனுசரணையுடன், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவும் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில், விளையாட்டுத்துறைப் பயிற்றுவிப்பாளர்களுக்கான நான்கு நாள் திறன் விருத்திப் பயிற்சி நெறியை ஏற்பாடு செய்திருந்தன.
கடந்த 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு கட்டடத் தொகுதியில் இப்பயிற்சி நெறி நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு உத்தியோகத்தர்கள், பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்கள், பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் தனியார் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் விரிவுரையாளர்கள் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, பயிற்சியாளர்களுக்குத் தேவையான பல்வேறு பயிற்சிகளையும் அறிவுரைகளையும் வழங்கினர்.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 20ஆம் திகதி பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேலும், ஓய்வுபெற்ற மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பி.ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.ஆதம், புதிதாக நியமனம் பெற்றுள்ள மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஜி.பி.ஜோன்பிள்ளை மற்றும் தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் போதனாசிரியர் எம்.சஜினாஸ் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தராக நீண்டகாலம் கடமையாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற பிஜெயக்குமார் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









