மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக நாட்டுக்கு கொண்டுவர தாமதமடைந்திருந்த 10,000 புகையிரத தண்டவாளங்கள் 23.08.2026 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் தகவலின்படி, துறைமுகத்தை வந்தடைந்துள்ள தண்டவாளங்கள் தற்போது இறக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் சுமார் 5,000 தண்டவாளங்கள், வேகக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள கரையோர புகையிரதப் பாதையின் பகுதிகளை புனரமைப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளன.
கொழும்பு கோட்டை முதல் பாணந்துறை வரையிலான புகையிரதப் பாதையில் சுமார் 50 இடங்களில் தண்டவாளங்களை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புனரமைப்பு பணிகளை நிறைவு செய்ய சுமார் ஆறு மாதங்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகையிரத தண்டவாளங்களை கொள்வனவு செய்வதற்காக உள்நாட்டு நிதியிலிருந்து சுமார் 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், தண்டவாள புனரமைப்பு பணிகளுடன் இணைந்து புகையிரத பாலங்களை நிர்மாணித்தல் மற்றும் புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளையும் முன்னெடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த புனரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், கரையோர புகையிரதப் பாதையில் இயக்கப்படும் புகையிரதங்களுக்கு தற்போது ஏற்படும் தினசரி தாமதங்கள் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகையிரத சேவையின் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதுடன், பயணிகளுக்கு ஏற்படும் தாமதங்களைக் குறைப்பதிலும் இந்த திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








