மாற்றுத்திறனாளிகளான பிள்ளைகள் மிகவும் உணர்வுபூர்வமான பிள்ளைகள் பிரிவினராக இருப்பதால், அவர்கள் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களுக்கு உள்ளாகாத வகையில், அவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தைப் பேணுவதற்குத் தேவையான சமூக விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்காக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் ஏனைய தரப்பினரை அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
வெனிவெல்கொலவில் அமைந்துள்ள “ஷிஷ்யோதா விசேட மற்றும் உள்ளடக்கிய கல்வி தொடர்பான தேசிய நிறுவனத்திற்கு 25.08.2026 அன்று மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
நிறுவனத்தின் கட்டமைப்பை அவதானிப்பதுடன், அதன் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகள் தொடர்பில் தெளிவைப் பெற்றுக்கொள்வதே பிரதமரின் இந்த கண்காணிப்பு விஜயத்தின் நோக்கமாகும்.
உள்ளடக்கிய கல்வி (Inclusive Education) தொடர்பான அடிப்படைத் தரநிலைகள் மற்றும் திட்டங்களுக்கு புறம்பாக 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தை, குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கும் மற்றும் உள்ளடக்கிய கல்வியின் இலக்குகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றும் நிறுவனமாக மாற்றுவதற்கான முறையான செயன்முறையொன்றை உருவாக்க வேண்டும் என பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.
இதற்காக விசேட குழுவொன்றை நியமித்து, தேவையான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கான மருத்துவச் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான சிகிச்சையாளர்கள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்த பிரதமர், நிறுவனத்தின் உபகரணங்கள் மற்றும் கட்டிடங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி உரிய பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அந்த நிறுவனத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைத் தேடுவது அத்தியாவசியமான விடயமாகும் எனவும், அதுவரையில் உடனடியாகத் தீர்வு வழங்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தலையீடு செய்ய வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் நலன்பேணல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பனாகொட, ஹோமாகம பிரதேச சபையின் தலைவர் கசுன் ரத்நாயக்க, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
(பிரதமர் ஊடகப் பிரிவு)













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









