எதிர்வரும் இரண்டு ஆண்டுகள் காலப்பகுதியில் சூரிய சக்தி, காற்று மற்றும் மின்கல சக்தி மூலம் 2,700 கிகாவோட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (11.09.2026) உரையாற்றிய அமைச்சர், இக்காலப்பகுதியில் சூரிய சக்தி மூலம் 1,392 கிகாவோட், காற்று சக்தி மூலம் 370 கிகாவோட் மற்றும் மின்கல சக்தி மூலம் 1,000 கிகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், மேற்கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கடந்த காலத்தில் பாரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், அதற்கமைய தற்போது மேற்கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல தகடுகள் மூலம் சுமார் 2,500 கிகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மின் உற்பத்தியில் சில சந்தர்ப்பங்களில் மின்சாரம் உபரியாக இருக்கும் நிலைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை தினங்களில் இவ்வாறு உபரி மின் உற்பத்தி இடம்பெறுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, தேசிய மின் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காகச் சில சந்தர்ப்பங்களில் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மின்கல ஊடாக மின்சாரத்தைச் சேமிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், பகல் நேரங்களில் அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைத்து, அதனை இரவு நேரங்களில் விநியோகிக்க எதிர்காலத்தில் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









