முதலீடுகள் மற்றும் கைத்தொழிற்துறை சார்ந்த அரச நிறுவனங்களுக்கு இடையில் காணப்படும் நிர்வாக மற்றும் ஒழுங்குமுறை தடைகளை நீக்கி, அந்தச் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC), கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தொழில் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க ஆகியோரின் தலைமையில் 2209.2026 அன்று திறக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைய, கைத்தொழிற்துறையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தகமொன்றைத் தொடங்கும்போதும் அதனைப் பராமரிக்கும்போதும் அரச பொறிமுறையுடன் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கும், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் இம்மையத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்படி, “ViYASA ” தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC) கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை இலக்கம் C-80 கட்டடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட செயற்படுகிறார்.
இதனுடன் இணைந்ததாக https://nbfc.presidentsoffice.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி,
இந்த மையத்தைத் திறப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது எங்களுக்குப் பெரிய தைரியமாகும். குறிப்பாக இவ்வாறானதொரு நிறுவனத்தை ஆரம்பிப்பதை வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் பல
அரசாங்கங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்தனர். நாங்கள் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுப் பணிகளை ஆரம்பித்த நாள் தொடக்கம் அனைத்து வர்த்தக சம்மேளனங்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களின் கோரிக்கையாக இந்த விடயம் மாறியிருந்தது.
நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாகவே இவ்வாறானதொரு நிறுவனம் குறித்த திட்டமிடல்களுடன் தான் செயற்பட்டோம். கைத்தொழில் அமைச்சு தனித்து இயங்கும் நிறுவனமொன்று அல்ல. நாங்கள் அனைத்து அமைச்சுகளுடனும் நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படுகிறோம்.
முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளைத் உடனடியாக வழங்க முடியாமை நாங்கள் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினையாகும். எமது அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாகவும், நியாயமாக நீதி நிலைநாட்டப்படுவதன் காரணமாகவும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு முதலீடுகளைக் கொண்டுவந்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் அனைவரும் முகங்கொடுக்கும் மிகப்பெரிய பிரச்சினை காணிப் பிரச்சினையாகும். கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வேகத்திற்கு காணிகள் தொடர்பான விடயங்களை சீர் செய்து கொடுப்பதற்கான நிலையமொன்று இருக்கவில்லை. எமது பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளன. சில காணிகள் பயன்படுத்தாமல் இருந்தாலும், அவற்றுக்கு வழக்குகள் உள்ளன. இவைதான் பிரச்சினைகள்.
முதலீட்டாளர்கள் காணிகள் நிவர்த்தி செய்யப்படும் வரை காத்திருப்பதில்லை. அவர்கள் மாற்று இடங்களுக்குச் செல்கின்றனர். அடுத்த பிரச்சினை நிதி வசதிகளை வழங்குவதாகும். அங்கும் பிரச்சினைகள் உள்ளன.
அடுத்த பிரதான பிரச்சினை சுங்கம் தொடர்பான செயற்பாடுகளை எளிமைப்படுத்துவதாகும். தற்போது இந்த முதலீட்டாளர்களும், தொழில்முயற்சியாளர்களும் வரிகள் பற்றிப் கேள்வி எழுப்புவதில்லை. அவற்றைச் செலுத்தத் தயாராக உள்ளனர். அவற்றுக்கான பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போது அவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரச்சினை இருப்பது இந்தச் செயற்பாடுகளை எளிமைப்படுத்துவதிலேயாகும். அதற்கு இந்த புதிய நிறுவனம் மிகப்பெரிய பலமாக அமையும்.
காலம் காலமாக அமைச்சர்கள் வசித்து வந்த இடங்களை இதுபோன்ற தேவைகளுக்காகப் பயன்படுத்துவது பயனுள்ள செயலாகும். இதனை கைத்தொழில் அமைச்சுக்குரிய துணை நிறுவனமாகவே நாங்கள் கருதுகிறோம். இது ஜனாதிபதியின் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் சுயாதீனமாக இயங்கும் நிறுவனமாகும்.
சிலர் எதிர்வரும் ஆண்டில் எமக்கு கிடைக்கும் அந்நியச் செலாவணி குறையும் என நினைக்கின்றனர். அவ்வாறு நடக்க இடமளிக்கமாட்டோம். பல துறைகளின் கீழ் புதிய முதலீடுகளை ஈர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கனிம வளத்துறை புதிய முதலீடுகள் அதிகம் உள்ள துறையாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக தேசிய கனிம வளக் கொள்கையை நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம். அத்துடன் இலங்கையை சர்வதேச மாணிக்கக்கல் மற்றும் ஆபரண மையமாகக் கட்டமைப்பதற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
– தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ:
எமது அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையும் பொறுப்புடனும், இந்த நாட்டை மாற்றத்தை நோக்கி கொண்டு செல்வதில் பொருளாதாரம் ஒரு முக்கிய தூணாக அமைகிறது. அதன்போது
பொருளாதார அபிவிருத்தியை அடைந்துகொள்ள வேண்டும்.
இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் முகம்கொடுத்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கிக்கொண்டு முன்னோக்கி வந்துள்ளோம். மேலும் பல சவால்களை எதிர்காலத்தில் வெற்றிகொள்ள வேண்டியுள்ளது. இந்த விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் குறித்தும் நாம் புரிதலுடன் இருக்க வேண்டும்.
இந்த நேரத்திலும் கூட உலகளவில் நிச்சயமற்ற நிலைமைகள் காணப்படுகின்றன. அந்நியச் செலாவணி, ஏற்றுமதிகள், இறக்குமதி வருமானம் மற்றும் நிதித்துறை குறித்தும் நாம் தொடர்ந்தும் புரிதலுடன் இருக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
இந்தச் செயற்பாட்டின் மூலம் வெறும் வர்த்தக வசதிகளை வழங்குவது மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இது ஒரு சிறந்த பிரவேசமாகும். இந்த பிரவேசத்தின் ஊடாக நீங்கள் இணைந்துகொள்ளுங்கள். இங்கு ஒரு பலமான குழுவினர் இருக்கிறார்கள். எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். வளமான நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் பங்களிப்புச் செய்வோம்.
– ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க:
நாட்டின் மிகப் பாரிய தேவையொன்றைப் பூர்த்தி செய்வதற்காகவே நாம் இன்று இந்த ‘தேசிய வணிக வசதியளித்தல் மையம்’ ஆரம்பித்தோம் . இது ஜனாதிபதியின் எண்ணக்கருவாகும். இது நாட்டின் பொருளாதாரம் விரிவடைந்து வரும் ஒரு சந்தர்ப்பம் என்பதை நாம் அறிவோம்.
எனவே, எமது பொருளாதாரத்தை மேலும் விரிவடையச் செய்ய, இந்தச் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை முன்னேற்றுவது காலத்தின் தேவையாக உள்ளது. உள்நாட்டுச் சந்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டது என்பதால், நாம் ஏற்றுமதித் துறை குறித்து கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டு காரணங்களையும் கருத்திற்கொண்டு, அவற்றுக்கான தீர்வாகவே வணிக வசதியளித்தல் மையத்தின் ஆரம்ப செயற்பாடுகளும் பொறுப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ‘வணிக வசதியளித்தல் மையம்’ சாதாரண One-Stop Shop ஒன்றல்ல. அதைத் தாண்டிய, பல அமைச்சுகளை ஒன்றிணைத்து, தொழில்முயற்சியாளர்களின் பிரச்சினைகளுக்கு இலகுவாகத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் கட்டமைப்புகளை மாற்றியமைக்கும் ஒரு மையமாகும். தனியார் மற்றும் அரச துறைகளின் முறையான ஒருங்கிணைப்புடன் தொழில்முயற்சியாளர்களுக்குச் சிறந்த சேவையாற்ற நாம் செயற்பட்டு வருகிறோம்.
– ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட:
“ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நான் இது குறித்து ஆராய்ச்சி செய்த போது கண்டறிந்த ஒரு விடயம் என்னவென்றால், உலகளாவிய குறிகாட்டிகளின்படி ஒரு வர்த்தகத்தை ஆரம்பித்து அதனை நடாத்திச் செல்வதன் இலகுத்தன்மை குறித்து ஆராய்ந்தால், இலங்கை 79வது இடத்தில் உள்ளது (2025 இல்). சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது. அந்த உப-குறிகாட்டிகளைப் பார்க்கும் போது ஒரு காணியைப் பெற்றுக் கொள்ள, வர்த்தகமொன்றை பதிவு செய்ய எவ்வளவு காலம் செல்கின்றது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தச் செயற்பாட்டை இலகுபடுத்துவது குறித்து நாம் கவனம் செலுத்தினோம்.
இன்றைய தினம் முதல் இந்த மையத்தின் அனைத்துப் பணிகளையும் மக்களுக்கு திறந்து வைத்து ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். அரசாங்கம் எதிர்பார்க்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஆதரவளிப்பதே நமது எதிர்பார்ப்பாகும். இதன் சிறப்பு என்னவென்றால், எவரும் இந்த அலுவலகத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை. தங்கள் வீட்டில் இருந்தபடியே பிரச்சினையை அனுப்பி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், அந்த தொழில்முனைவோருக்காக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அப்பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்.
தீர்க்க முடியாத சட்ட அல்லது கொள்கை சார்ந்த பிரச்சினைகள் இருந்தால், தேசிய வணிக வசதியளித்தல் மையத்தின் தேசிய செயற்பாட்டுக் குழு மூலம் அரசாங்கத்திற்கு யோசனைகளை சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் நாட்டில் புதிய வர்த்தகங்கள் உருவாவதற்குத் தேவையான வசதிகளைச் செய்வதும், தற்போதுள்ள வர்த்தகங்களை மேலும் விரிவுபடுத்தி முன்னோக்கிச் செல்வதற்கு வாய்ப்பளிப்பதுமே நமது நோக்கமாகும்.”
– KIK வணிகக் குழுமத்தின் தலைவர் லலித் கஹட்டபிட்டிய:
“பல வருடங்களாக இருந்த ஒரு கனவு இன்று நனவாகியுள்ளது. உண்மையில் இதுபோன்றதொரு நிறுவனத்தை உருவாக்கியதற்காக ஜனாதிபதிக்கு நமது நன்றியும் கௌரவமும் உரித்தாகின்றது. நாம் அனைவரும் இந்த நிறுவனத்தின் மூலம் பயன்பெற வேண்டும்.”
இந் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுஃப், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள், இலங்கை வர்த்தக சம்மேளனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








