போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து சிறார்களைப் பாதுகாக்க பெற்றோருக்கு நேரடி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள்!

சட்டத்தை விட பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பலமான உறவு மூலமே போதைப்பொருள் பேரழிவில் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற முடியும். எனவே, இந்தப் பேரழிவின் மோசமான தாக்கம் மற்றும் பிள்ளைகளின் நடத்தைகளைக் கண்காணிக்கும் முறை குறித்துப் பெற்றோருக்கு நேரடி விழிப்புணர்வூட்டுவதன் ஊடாக பிள்ளைகளைப் பாதுகாப்பதில் அவர்களின் முழுமையான பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கான முறையொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை ஜனாதிபதி அலுவலகத்தில் 30.09.2026 அன்று கூடியபோதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரைகளை வழங்கினார்.

தமது பிள்ளை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் ஆபத்து காணப்படுமாயின், பெற்றோருக்கு அது குறித்து அறிவிப்பதற்கு நம்பிக்கைக்குரிய நபர் ஒருவரின் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவாக ஒரு ஆசிரியர் அல்லது மதத் தலைவரின் உதவி பெற நேரிடும் என்றும் அது தொடர்பில் கவனம் செலுத்தி நம்பிக்கைக்குரிய வழிகாட்டலை வழங்கக்கூடிய முறையான செயல்திட்டமொன்றை உருவாக்குமாறும், ஆசிரியர்களை இதற்காகப் பயன்படுத்துவதாயின் அவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய விநியோக வலையமைப்பை முறியடிப்பதற்காகச் செயற்படுத்தப்படும் செயல்திட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் அதன் பணிகளை செயற்திறனானதாக மாற்றுவதன் ஊடாக நாளாந்தம் பெறப்படும் பகுப்பாய்வு அறிக்கைகளின் அளவு அதிகரித்துள்ளதாகவும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் போதைப்பொருட்கள் தொடர்பான 8,000 பகுப்பாய்வு அறிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் தரவுகளை உள்ளடக்கும் பணிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது. பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதை செயற்திறனுடன் செயற்படுவதன் காரணமாக போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் பிணையில் விடுவிக்கப்பட்டு சிறைச்சாலை நெருக்கடியைக் குறைக்க முடிந்துள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு தொடர்பான புதிய சட்ட மூலத்தை ஒக்டோபர் முதல் வாரத்தில் தொடர்புடைய பாராளுமன்ற குழுவிற்கு சமர்ப்பித்து அதன் அனுமதியைப் பெற்று, ஒக்டோபர் மாதத்தின் 3 ஆவது வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.

பொலிஸ், அரச பகுப்பாய்வுத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு என்பனவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தும் மத்திய டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் மென்பொருள் ஒன்றை உருவாக்குவதற்கான பணிகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

2025 ஆம் ஆண்டின் 07 இலக்கச் சட்டத்திற்கு அமைய, நிபுணர்கள் மற்றும் அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கைகளை மின்னஞ்சல் ஊடாக நேரடியாக நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தல் மற்றும் சட்ட வரைஞர் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது ஆராய்ந்தார்.

போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்காக சர்வதேசப் பாடசாலைகளில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

போதைப்பொருள் பாவனையின் மோசமான விளைவுகள் குறித்து சமூக வலைத்தளங்கள் ஊடாக இளைஞர்களை இலக்காகக் கொண்ட திட்டங்களைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், போருக்குப் பின்னரான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பரவி வரும் போதைப்பொருளை பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான சவால் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

புனர்வாழ்வு நிலையங்களின் கொள்ளளவை அதிகரிப்பது உட்பட புனர்வாழ்வு செயன்முறையின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பில் அஸ்கிரி தரப்பின் அநுநாயக்கராக அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த, ராமஞ்ஞ மகா நிக்காயவின் அனுநாயக்க அதிவணக்கத்திற்குரிய வலேபொட குணசிரி, அதிவணக்கத்திற்குரிய குப்பியாவத்தே போதானந்த ஆகிய தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தினரும், அருட்தந்தை நிஷாந்த பெர்னாண்டோ , ஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள், முத்துசாமி அழகேசன் குருக்கள், ஷேக் முகமத் அர்கம் நூராமித் மௌலவி உள்ளிட்ட மதத் தலைவர்களும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஆயேஷா ஜினசேன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் டப்ளியு.எம்.டி.டி. விக்ரமசிங்க, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் அருண பண்டார, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர ஆகிய அதிகாரிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர், முப்படைத் தளபதிகள் தலைமையிலான பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட முழுநாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects