கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், அடுத்த ஆண்டு முதல் ‘மெட்ரோ நகர்ப்புற பேருந்து சேவை’ அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கான ஆரம்பகட்ட கள ஆய்வாக 12 மீட்டர் நீளம் கொண்ட மெட்ரோ பேருந்து வெள்ளோட்டம் 15.10.2026 அன்று கண்டி நகரில் நடைபெற்றது.
இந்தச் சேவைக்கு மிகவும் பொருத்தமான வீதிகளைத் தேர்வு செய்தல், பேருந்துகளின் தொழில்நுட்பத் தேவைகளைத் தீர்மானித்தல் மற்றும் பயணிகள் ஏற இறங்குவதற்கான பேருந்து நிறுத்தங்களை அடையாளம் காணுதல் ஆகிய நோக்கங்களிலேயே கள பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இந்தச் சேவை கொழும்புக்கு வெளியே கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய முக்கிய நகரங்களிலேயே ஆரம்பகட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது
அத்துடன், 2029 ஆம் ஆண்டு வரையிலான விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கொழும்புடன் ஒப்பிடுகையில் கண்டி மற்றும் காலி நகரங்களின் வீதி அமைப்புகள் வேறுபட்டவை என்பதால், அங்கு இச்சேவையைத் தொடங்குவதற்கு முன்னர் வீதி கட்டமைப்பு குறித்த முன்கூட்டிய ஆய்வுகள் அவசியமாகின்றன.
தற்போது கண்டி நகருக்குள் அதிகளவில் தனியார் வாகனங்கள் நுழைவதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையைக் கட்டுப்படுத்தி, மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதற்காக நகருக்குள் வரும் வாகனங்களின் தரவுகளும் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கள (ஓட்டம்) பரிசோதனையின் போது கண்டி சேனநாயக்க வீதி, தலதா வீதி, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, முல்கம்பல, கெட்டம்பே சந்தி, கலாஹ சந்தி, பேராதனை, அங்குனாவல, கெலிஓய, வெலிகல்ல மற்றும் பொத்தம்பிட்டி ஊடாக கம்பளை வரை பஸ் இயக்கப்பட்டது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய மெட்ரோ பஸ் பாதையின் மொத்த தூரம் 19 கிலோமீற்றர்களாகும்.
இந்தச்சோதனை ஓட்டத்திற்கு முன்னதாக, கண்டி மத்திய மாகாண வீதி அமைச்சின் மண்டபத்தில் பிரதி அமைச்சரின் தலைமையில் முக்கிய கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண பிரதான செயலாளர் அஜித் பிரேமசிங்க, மாகாண வீதி அமைச்சின் செயலாளர் திலீஷா ரூபானி பியதாச, கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க, மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அஜித் பிரியந்த, லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் பி.எம். பியதிலக்க, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









