நாட்டில் வழக்கமான வாகனப் பதிவு எண்களுக்குப் பதிலாக, தனிநபர்களின் பெயர்கள் அல்லது வணிக நிறுவனங்களின் பெயர்களைக் காட்சிப்படுத்தும் வகையிலான தனிப்பயனாக்கப்பட்ட வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் அண்மையக் கூட்டத்தில், அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இத்திட்டம் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவின்படி, வாகன உரிமையாளர்கள் சாதாரண பதிவு எண்ணுக்குப் பதிலாகத் தங்களது பெயர் அல்லது வணிகப் பெயரைக் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட இலக்கத் தகடுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது அரசாங்கத்திற்கு கூடுதல் வருவாயை ஈட்டுவதோடு, வாகன ஓட்டிகளுக்கு அதிக தேர்வுகளை வழங்கும் நோக்கில், சிறப்பு வாகனப் பதிவு எண்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் இந்தக் குழு விவாதித்துள்ளது.
எனினும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அதன் தொழில்நுட்ப, சட்ட மற்றும் பாதுகாப்புச் சார்ந்த தாக்கங்கள் குறித்து விரிவான மதிப்பீடு தேவை என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இக்கலந்துரையாடல்கள், இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வழங்கும் வாகனப் பதிவு முறையை நவீனமயமாக்குவதற்கும், சேவைகளை மேம்படுத்துவதற்குமான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக நோக்கப்படுகிறது.
தனிப்பயனாக்கப்பட்ட இலக்கத் தகடுகளுக்கான கட்டணக் கட்டமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் திகதி குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் அரசாங்கம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









