இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் மற்றும் அவரது தூதுக்குழுவினர் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை 27.10.2026 அன்று சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்த்திபில், அமெரிக்க தூதுவரை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இரு நாடுகளுக்குமிடையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு ‘Fulbright’ புலமைப்பரிசில் திட்டம் வழங்கியுள்ள பங்களிப்பைப் பாராட்டியதுடன், அத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துதல், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை பலப்படுத்துதல், இலங்கையை அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய இடமாக விளம்பரப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
கடல்சார் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பு உட்பட, கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அமெரிக்காவின் சமாதானப் படையினூடாக (U.S. Peace Corps) நடைமுறைப்படுத்தப்படும் ஆங்கில மொழிப் பயிற்சித் திட்டம் குறித்தும், இலங்கையின் ஆங்கில மொழிக் கல்வியை பலப்படுத்துவதற்கு அத்திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய பங்களிப்புக் குறித்தும் பிரதமருக்கு தூதுவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்துவதன் மூலம், இலங்கைக்கும் அமெரிக்காவிற்குமிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவதற்குத் தமது அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.
இச்சந்திப்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டேவிட் மேயர்ஸ் உள்ளிட்ட அவரது தூதுக்குழுவினரும், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பிரிவுப் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








