களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்ட தொழுநோய்க்கான தொடர் சிகிச்சை நிலையம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை பிரிவில் தொழுநோயாளர்களுக்கான தொடர் சிகிச்சை நிலையம் 30.10.2026 அன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.புவனேந்திர நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளிஸ்வரன் மற்றும் சமூக நல மருத்துவ நிபுணர் நிலுக்கா குணதிலக்க ஆகியோர் சிகிச்சை நிலையத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்புப் பிரிவு வைத்திய அதிகாரி டபிள்யூ.டி.என்.செனவிரத்ன, மாவட்ட தொழுநோய் வைத்தியப் பொறுப்பதிகாரி வைத்தியர் லுபோஜிதா கமல்ராஜ், பொறுப்பு வைத்தியர்கள், சுகாதாரப் பரிசோதகர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தொழுநோயாளர்கள், தமது தொடர்ச்சியான சிகிச்சை சேவைகளை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையிலும் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் இச்சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொழுநோயானது முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலம் நோயினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். உரிய சிகிச்சை பெறாத நிலையில், இந்நோய் நரம்புகள் மற்றும் தோலைப் பாதித்து அவயவ இழப்புகளுக்கும் வழிவகுக்கக்கூடும்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், நோயாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு வாழைச்சேனைப் பிரதேசத்திலும் இவ்வாறானதொரு தொடர் சிகிச்சை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குள் இலங்கையிலிருந்து தொழுநோயை முற்றாக ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என சமூக நல மருத்துவ நிபுணர் நிலுக்கா குணதிலக்க வலியுறுத்தினார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects