ஜனாதிபதி நிதியத்தினால் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு!

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாவட்ட மட்டத்தில் பாராட்டுவதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் சப்ரகமுவ மாகாண நிகழ்ச்சித் திட்டம் 03.11.2026 அன்று இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

நாட்டின் எதிர்கால மனித வளமாக அவர்கள் செய்துள்ள அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளைப் பாராட்டி ஊக்குவிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கமைய, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற தலா 20 மாணவர்கள் வீதம் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், அம்மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 நிதியுதவியும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன,

“நாட்டின் மக்களே முதன்மையானவர்கள்” என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக, இன்று ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மக்களுக்காகப் பரந்த அளவிலான பங்களிப்பு வழங்கப்படுகின்றது” எனக் குறிப்பிட்டார்.

இதுவரை இருந்த அரசியல் கலாசாரத்தை மாற்றி, உயர்ந்த ஒழுக்கத்துடன் நாட்டை வழிநடத்தும் பொறுப்பானது கல்விமான்கள் மற்றும் அறிவுசார்ந்த குழுவிடம் ஒப்படைக்கப்படும் வகையில் பாராளுமன்றம் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், இலவசக் கல்வியின் நன்மைகளைப் பெறும் மாணவச் சமூகம் அறிவாலும் நற்பண்புகளாலும் போஷிக்கப்பட்டு, தாங்கள் பெற்ற அறிவை நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்துவதற்கும், எதிர்காலத் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்பதற்கும் முன்வர வேண்டும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி,

கல்வி என்பது ஒரு பிள்ளைக்கு வெறும் அறிவை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது எனக் குறிப்பிட்டார். சமூகத்தில் உள்ள ஏனைய மனிதர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கும், சுற்றாடலை நேசிப்பதற்கும், மத மற்றும் கலாசார வேறுபாடுகளை பொறுமையுடன் சகித்துக்கொண்டு அவற்றுக்கு மதிப்பளிப்பதற்கும் பிள்ளைகளைப் பழக்குவதுடன், மனித விழுமியங்கள் நிறைந்த பிரஜைகளை உருவாக்குவதும் கல்வியின் நோக்கங்களில் அடங்கும் என்று சுட்டிக்காட்டினார்.

கல்வித் துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, ஒவ்வொரு பிள்ளைக்கும் தரமான கல்வியையும் சமமான கல்வி வாய்ப்புகளையும் வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்ட அமைச்சர், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி நிதியம் வழங்கி வரும் பங்களிப்பையும் பாராட்டினார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகேவும் இங்கு கருத்துத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சாந்த பத்மகுமார சுபசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, நிலூஷா லக்மாலி கமகே உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் உபாலி ஜயசேகர மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects