நாட்டில் நுரையீரல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு – தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம்

நாட்டில் நுரையீரல் புற்றுநோயாளிகள் பதிவாகும் போக்கில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் நுரையீரல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் சுமார் 50 சதவீத வளர்ச்சி தென்படுவதாக தேசிய சுவாச நோயியல் நிறுவனத்தின் மார்புக் குழி தொடர்பான நிபுணத்துவ அறுவை சிகிச்சை வைத்தியர் சமன் இத்தாகொட சுட்டிக்காட்டுகிறார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வைத்தியர் சமன் இத்தாகொட இதனைத் தெரிவித்தார்.

“கடந்த காலத்தில் நாம் இலங்கையின் தரவுகளை பரிசீலித்தோம். வெலிசறை மார்பு வைத்தியசாலையை மையமாகக் கொண்ட தரவுகளை ஆராய்ந்தபோது, இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். உண்மையில், 2010 முதல் 2020 வரையிலான காலப்பகுதியில் வெலிசறை மார்பு வைத்தியசாலையில் உள்ள நுரையீரல் புற்றுநோய் பற்றிய தரவுகளையும், தேசிய புற்றுநோய் தடுப்பு இயக்கத்தின் தரவுகளையும் நாங்கள் பரிசீலித்தோம். அதில், இலங்கையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருசாராரிடையேயும் நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சி நிலை மிகவும் அதிகமாக உள்ளது என்பது தெரியவந்தது. 2010 முதல் 2020 வரையிலான காலத்தில் இலங்கையில் ஆண்களிடையேயும் பெண்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் 50% வளர்ச்சியைக் காட்டுகிறது. இதன் காரணமாகவே இது ஆண்களிடையே முக்கிய புற்றுநோய்களில் ஒன்றாகவும், பெண்களிடையே முதல் 10 புற்றுநோய்களுக்குள் வரும் நோயாகவும் மாறி வருகிறது. இலங்கையிலும் புகைபிடிக்காத நபர்கள், குறிப்பாக புகைபிடிக்காத பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.” என்றார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோவும் நுரையீரல் புற்றுநோய் குறித்து கருத்து தெரிவித்தார்.

“நுரையீரல் புற்றுநோய்களில் சுமார் 90 சதவீதமானவை இந்தப் புகைபிடித்தலுடன் தொடர்பாகின்றன. புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் இரண்டாம் நிலை புகைபிடித்தல் (Secondary smoking) என்பது நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு ஆபத்து காரணியாகும். வெளிப்புற சூழலில் ஏற்படும் காற்று மாசுபாடும், வீட்டு உட்புற காற்று மாசுபாடும் ஆகிய இரண்டும் இதற்குப் பங்களிக்கின்றன. வெளிப்புற சூழலின் காற்று மாசுபாடு பெரும்பாலும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் எரிபொருள் புகையினால் ஏற்படுகிறது. வீட்டு உட்புற சூழலின் பிரச்சினை என்னவென்றால் விறகு அல்லது மண்ணெண்ணெய் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படுகிறது. அங்கு வீட்டில் சரியான காற்றோட்டம் இல்லாததே பிரச்சினையாக அமைகிறது. ஏனெனில் அந்தப் புகை வீட்டிற்குள்ளேயே தேங்கி நிற்கிறது. இவை தவிர, நீண்டகாலமாக இருக்கும் சில சுவாச நோய்கள், மண் மற்றும் கட்டிடப் பொருட்களில் காணப்படும் ‘ரேடான்’ (Radon) எனப்படும் கதிர்வீச்சு வாயு, அதேபோன்று அஸ்பெஸ்டாஸ், சிலிக்கா போன்ற மனித புற்றுநோய் காரணிகளுக்கு ஆளாவதும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உயர்த்துகிறது.” என்றார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects