வலுசக்தித் துறையில் போட்டியை அதிகரித்தல் மற்றும் நுகர்வோர் நலன் உறுதிப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டு, “போட்டித்திறன் கொள்கை மற்றும் சட்டம்” குறித்த உயர்மட்டக் கருத்தரங்கு 13.11.2026 அன்று கொழும்பில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் தலைமையில் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) ஆதரவுடன் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்படும் வலுசக்தி மற்றும் மின்சாரத் துறைகளில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்காக நியாயமான போட்டிச் சூழலையும் புதிய சந்தை வாய்ப்புகளையும் உருவாக்குவதே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.
இலங்கை மின்சார சபையை (CEB) மறுசீரமைத்ததைத் தொடர்ந்து உருவாகியுள்ள புதிய சூழலில் இத்தகைய கருத்தரங்கை ஏற்பாடு செய்திருப்பது காலத்திற்கேற்ற மற்றும் முக்கியமானதாகக் கருதலாம்.
வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான போட்டிச் சூழல் மூலம் வலுசக்திப் பாதுகாப்பை உறுதி செய்தல், நுகர்வோர் எதிர்கொள்ளும் மின்சார மற்றும் வலுசக்திச் செலவைக் குறைத்தல் மற்றும் வலுசக்தித் துறையில் தனியார் துறையின் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்துதல் ஆகியவை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இதற்காக பிரதான கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குபடுத்துநர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்களை ஒரே மேடையில் இணைத்து, வலுசக்தித் துறையின் போட்டித்திறன் கொள்கை மற்றும் சட்டக் கட்டமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபொன்சு, JICA இலங்கை அலுவலகத்தின் பிரதம பிரதிநிதி ஷிகியோ ஹொன்சு (Shigeo Honzu) மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பேராசிரியர் கே. பி. எல். சந்திரலால் ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.
இந் நிகழ்வில், ஜப்பானின் போட்டித்திறன் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பிரதான நிறுவனமான Japan Fair Trade Commission இன் நான்கு நிபுணர்கள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கை வகுப்பாளர்களும் பல்வேறு நிபுணர்களும் கலந்துகொண்டனர்.



![]()









