2024 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பமானது.
பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாட்டில் இயங்கிவரும் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் மற்றும் அவற்றின் சேவைகளை நெறிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, தேசிய ஒற்றுமைக்கும் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், தேசிய நீரளவை சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான உத்தரவுகள் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்கு விதிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பின்னர் மாலை 05:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஆளுங்கட்சியால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதிக்கப்படும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇👇