ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் தொடர்ச்சியான விமான தாமதங்கள் தொடர்பில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு விமான தாமதங்கள் தொடர்பில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளம் மற்றும் இந்தியாவுக்கு நேற்றைய தினம் புறப்படவிருந்த இரண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இரத்து செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.
அதன்படி, 200 பயணிகளுடன் நேற்று காலை 08.20 க்கு நேபாளத்தில் உள்ள காத்மண்டு நகருக்கு புறப்படவிருந்த யூ.எல் 181 என்ற விமானம் பல மணி நேரம் தாமதமாக வந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்தியாவின் மும்பை விமான நிலையத்துக்கு புறப்படவிருந்த மற்றொரு விமானமும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விமான தாமதத்தினால் விமான நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒரே நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததுடன், தாமதங்களுக்கு மன்னிப்பும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.