பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. புதிய கட்டடத் தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள், குருதி சுத்திகரிப்பு பிரிவு, கதிரியக்கப் பிரிவு, சிறுவர்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவு, குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளர் விடுதி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் காணப்படும் நான்கு ஆதார வைத்தியசாலைகளில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் ஒன்றாகும். இது “ஏ” தர ஆதார வைத்தியசாலையாக காணப்படுகின்றது.
ஆதார வைத்தியசாலைகளின் வசதிகள் குறைவாக காணப்படுவதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அதிகளவில் நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர மற்றும் திடீர் விபத்து பிரிவின் ஊடாக பலர் நன்மையடைய உள்ளனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சிகிச்சைப் பிரிவுகளை சென்று பார்வையிட்டனர். இந்த வைத்தியசாலையின் ஊடாக அதிகபட்ச பலனை பெற்றுக்கொள்ள வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதன்போது தெரிவித்தார்.
குறிப்பாக புதிய சிகிச்சை பிரிவில் CT ஸ்கேன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையானது இப்பகுதி மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
ஆகவே மத்திய அரசாங்கத்தின் “அனைவருக்கும் ஆரோக்கியம்” என்ற கொள்கையை அனைத்து மக்களிடையேயும் கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇