மாகாணத்தில் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அதற்கு அதிகாரிகளின் நேர்மையான செயற்பாடுகள் அவசியம் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார துறைசார்ந்த உயர் அதிகாரிகளுக்கும், ஆளுநருக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் 19/04/2024 அன்று நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சுகாதார சேவையை முன்னெடுப்பதில், மாவட்ட ரீதியில் காணப்படும் இடர்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளால் ஆளுநருக்கு எடுத்துக்கூறப்பட்டது. சில பகுதிகளில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகவும், பௌதீக வளப் பற்றாக்குறை பாரிய சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோயாளர்களின் உரிமைகளை பாதுகாத்து கரிசனையுடன் செயற்பட வேண்டிய பொறுப்பு சுகாதார அதிகாரிகளிடம் காணப்படுவதாகவும், கொள்கைகளை பின்பற்றி அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் இதன்போது தெரிவித்தார். மத்திய அரசாங்கத்திடமிருந்து ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாகவும் ஆளுநர் இதன்போது கூறினார்.
தரமான சிறந்த சுகாதார சேவையை உறுதி செய்து, அதனை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇