சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் 27.04.2024 அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.
குறித்த மீளாய்வின் அடிப்படையில், ஊழியர் மட்ட இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்றுக் குழுவின் இணக்கப்பாடு வழங்கப்படாதுள்ளதாக அவர் கூறினார்.
அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் சில காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டை ஒப்பந்தமாக மாற்றுவது இதில் முக்கியமான நிபந்தனையாகுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது மற்றைய நிபந்தனையாகக் காணப்படுவதாக அவர் கூறினார்.
இதற்கமைய, சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பேச்சுவார்த்தையில் அடையாளங்காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில், இரண்டாவது பேச்சுவார்த்தையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உயர்ந்தபட்ச வௌிப்படைத் தன்மையுடன் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇