மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படும் 2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்க அதிபர் சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு 30-04-2024 அன்று வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர். திரு. கணபதிப்பிள்ளை மகேசனும், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிவராஜா, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிக்குப் பொறுப்பாக உள்ள மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி, சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியை பாரதி கென்னடி, பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு மாநகரசபை பொறியியலாளர், மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர், கல்வித் திணைக்கள பணிப்பாளர்கள், சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சங்கத்தின் செயலாளர் உட்பட பல்வேறு திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீர வீராங்கனைகள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
மூன்று மைதானங்களில் சுமார் ஒரு வார காலத்திற்கு நடைபெறவுள்ள இந்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், அனைத்து பிரதேச செயலகங்கள், கிழக்குப் பல்கலைக்கழகம், காத்தான்குடி நகரசபை, மட்டக்களப்பு மாநகர சபை, விவசாயத் திணைக்களம், மீன்பிடித் திணைக்களம், சித்த ஆயுள்வேத ஆதார வைத்தியசாலை, மின்சார சபை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, RDHS உட்பட சுமார் 60 அணிகள் மோதவுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் அனைத்து அணிகளின் அணிவகுப்புடன் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பமான இந்நிகழ்வினைத் தொடர்ந்து பெண்களுக்கான முதலாவது போட்டியை அதிதிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளின் Band வாத்தியக் குழுவினர் பங்குபற்றியிருந்தமையும், அவர்களை அரசாங்க அதிபர் பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇