இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளதா இல்லையா என்பது குறித்தும் சுகாதார ஊழியர் இடமாற்றக் கொள்கை குறித்தும் இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து கலந்துரையாடுவதற்கு சுகாதார அமைச்சு மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) அதிகாரிகளை அழைக்க ஒன்றியம் தீர்மானித்தது.
இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தலைமையில் அண்மையில் (14) கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளதா இல்லையா என்பது குறித்து கலந்துரையாடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைப்பதற்கும் அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் ஒன்றியத்தின் உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது.
பல சுகாதாரப் பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதால், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சிறு ஊழியர்களின் இடமாற்றக் கொள்கை முறையாக மீளாய்வு செய்யப்பட வேண்டும் என வைத்தியகலாநிதி திலக் ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தினார்.
வைத்தியகலாநிதி ராஜித சேனாரத்ன, நாட்டில் போதியளவு ஊட்டச்சத்து நிபுணர்கள் இல்லை என தெரிவித்ததுடன், உள்நாட்டில் ஊட்டச்சத்து நிபுணர்களை உருவாக்கத் தேவையான பொருத்தமான முறைமையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
வைத்தியகலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, இயலாமையுடைய நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகளுக்கு ஒன்றியம் ஆதரவளிக்க வேண்டும் என்றும், இத்துறையில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் பணி மற்றும் மேற்பார்வை குறித்தும் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான வைத்தியகலாநிதி சீதா ஆரம்பேபொல, வைத்தியகலாநிதி ராஜித சேனாரத்ன, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வைத்தியகலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் வைத்தியகலாநிதி திலக் ராஜபக்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇